20

கொதிப்படைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அமெரிக்காவும் இன்னொரு பக்கம் தினசரிகளும் ஊடகங்களும். அமெரிக்கா என்றால் முழு அமெரிக்காவுமல்ல. தினசரிகள் என்றால் எல்லா தினசரிகளும், எல்லா ஊடகங்களும் அல்ல.

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே போராட்டம் நடக்குமானால் உணர்ச்சிதான் ஜெயிக்கும். எப்போதுமே. அறிவுப்பூர்வமாகவே இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது  மூளையில்  அறிவின் செயல்பாட்டுக்கு நியோகார்டெக்ஸ் எனப்படும் பகுதியும் உணர்ச்சிகளின் செயல்பாட்டுக்கு அமிக்டாலா என்ற பகுதியும் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கின்றன. நியோகார்டெக்ஸ் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கில் செயல்படும் வேகம் கொண்டது. ஆனால் அமிக்டாலாவோ ஒரு விநாடியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கிலேயே செயலாற்றும் ராக்கட் வேகம் கொண்டது. சொல்கிறது விஞ்ஞானம்.

எனவே அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் எது வெல்லும் என்ற கேள்வியே அபத்தமாகிப் போகிறது. நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, ஒரு கூட்டமாகச் செயல்படும்போது அங்கே அறிவு வேலை செய்யாது.  குறிப்பாக  எதிர்வினையாற்றும்போது. சிந்திக்கும் திறன்கொண்ட மனிதன் ஆட்டு மந்தைகளுக்குப் போட்டியாகத்தான் கும்பலோடு கலக்கும்போது செயல்பட முடியும். இதில் ஜாதி, மதம் என்ற வித்தியாசங்கள் கிடையாது. உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் காரியங்கள் தவறா சரியா என்று அந்த உணர்ச்சி அடங்கிய பிறகுதான் முடிவு செய்ய முடியும்.

அறிவுப்பூர்வமாகத் திட்டமிட்டு பாப்ரி மஸ்ஜிதை இடித்த பிறகு அது ”உணர்ச்சியின் வெளிப்பாடு” என்றுதான் திட்டங்களுக்கு கோடு, ரோடு எல்லாம் போட்டுக்கொடுத்த தலைகள் சொல்லின. ஆனால் பல மாமாங்கங்கள் கழித்து குற்றவாளிகள் இன்னின்னபேர் என்று தெளிவான அறிக்கை வந்தபிறகும் அதில் ஒருவர்கூட இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை. அமிக்டாலா, நியோகார்டக்ஸ் இரண்டுமே இல்லாமல் போன ஒரு அரசு உலகில் நமதாகத்தான் இருக்கும்!

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு கொசு மாதிரி. ஆனால் பல தலைமுறைகளாக நமது மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இழைக்கப்படும் கொடுமைகள் முடிவே இல்லாமல்  சிந்துபாத் கதைபோலத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நான் சின்னப்பையனாக இருந்தபோதிருந்தே இந்தப் பிரச்சனை இருக்கிறது. ஏன், அதற்கு முன்கூட இருந்திருக்கலாம். இதுவரை எதுவுமே ‘காங்க்ரீட்’டாக அப்பிரச்சனையைத் தீர்ர்கும் விதத்தில் செய்யப்படவில்லை. ஆனால், தர்மத்துக்குப் புறம்பான முறைகளில், கொடூரமாகப் பிரபாகரனையும் அவர் குடும்பத்தாரையும்  கொன்ற இலங்கை அரசுக்கு ’ராஜ’வரவேற்பு கொடுத்துக்கொண்டிருப்பதும் நமது அரசுதான்! (நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவோ எதிர்ப்போ கொண்டவனல்ல. பிரபாகரனுடைய மரணம் பற்றி பா.ராகவன் தமிழில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது அந்த விஷயம் பற்றி விபரமாக அறிந்துகொள்ள முடிந்தது. அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அதில் உள்ளன). ஏதோ குஜராத் பிரச்சனையில் மட்டுமாவது ’கோமா’வில் இருந்த இந்தியநீதி புத்துயிர் பெற்றுள்ளது சந்தோஷப்படக்கூடியதே.

இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக்  கேவலப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சினிமா பற்றிய எதிர்வினைகளையும் இப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது. ஆத்ம நண்பர்களைவிட, சொந்தபந்தங்களைவிட, காதலன், காதலியைவிட, மனைவி மக்களைவிட, பெற்ற தாய்தந்தையரைவிட, ஏன் உயிரைவிட உயர்வாக, இன்று ஒருவரை இந்த  உலகம் மதிக்கிறது என்றால் அது நபிகள் நாயகத்தை மட்டும்தான். நபிகள் நாயகத்துடன் பேசும்போதெல்ல்லாம் “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று அவர்களின் ஆத்ம நண்பர் அபூபக்கர் கூறுவது வழக்கம். அந்த அபூபக்கரின் ஆன்மாதான் இன்று இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலை உலக முடிவுநாள் வரையிலும் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

இன்று முஸ்லிகளுக்கிடையே பல ஜமாஅத்துகள்  தோன்றி, விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், இந்தவிஷயத்தில் மட்டும் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.   சமீபத்தில் தமிழகத்தில் நடந்த எதிர்வினைகள் அதைத்தான் நிரூபிக்கின்றன.

முதலில் தினமணியின் தலையங்கத்தில் உள்ள விஷ(ய)ங்களைப் பார்த்துவிடலாம்.

கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை

இப்படித்தொடங்குகிறது 20.09.12 தேதியிட்ட  தலையங்கம். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை சென்னையில் நடத்தக்கூடாதாம். அமெரிக்காவுக்குச் சென்றுதான் நடத்த வேண்டுமாம்! அப்படியானால் ”தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு” என்று எழுதியதற்கு அர்த்தம் என்ன? அது ஒரு அரசியல். முதலில் கட்டியணைக்க வேண்டும். பின்பு முதுகில் கத்தியால் குத்தவேண்டும். அதற்குத்தான். புரிகிறது. அடுத்த பத்தி இதோ:

இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்?

யாரை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லையா? ஒரு உன்னதமான மனிதரைக் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் எடுத்த அசிங்கமான மனதை எதிர்த்து, அதை வெளியிட  அனுமதித்த யூட்யூபின் நேர்மையின்மையை எதிர்த்து, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அதைத் தடைசெய்ய முடியாது என்று சொல்லும் ஹிலரி கிளிண்டன்களின் மனநிலையை எதிர்த்து. (சுதந்திரம் என்ற பெயரில் ஆணை ஆணே ’திருமணம்’ செய்துகொள்ள அனுமதித்து அதற்கு ‘சான்றித’ழும் கொடுக்கும் அமெரிக்கா வேறு எப்படிப்பேசும்?)

சாலையின் நடுவில் போகும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் வாதிட்டால் உங்கள்மீது என் காரை ஏற்றும் உரிமை எனக்கு இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டிவருமல்லவா? Your freedom ends where my nose begins என்று ஆங்கிலத்தில் அழகான ஒரு முதுமொழி உண்டு தெரியும்தானே? யாருக்காக, எதற்காக  இந்த போராட்டம் என்று என்ன கேள்வி இது? கேள்விகளின் பின்னால் உள்ள அசிங்கமான உள்நோக்கத்தை நியோகார்டக்ஸ் உள்ள யாரும் புரிந்துகொள்ள முடியும். ”நமது இஸ்லாமிய சகோதரர்கள்”! உண்மைதான். எல்லா மனிதர்களும் சகோதரர்கள்தான். ஆனால் அதை நீங்கள் சொல்வதுதான் ஆச்சரியமாக உள்ளது!

அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதல் ஒருநாள் மட்டுமே நடைபெற்றிருந்தால் அதை உணர்ச்சியின் எழுச்சியால் ஏற்பட்ட மனக்கொந்தளிப்பாகக் கருதலாம். ஆனால் தொடர்ந்து 5வது நாளாக அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைப்பதும், ஐந்து நாள்களாகப் பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவதும் ஏன் என்பதுதான் புரியவில்லை.

ஆக, ஒரேயொருநாள் தாக்குதல் நடத்தி அதில் அமெரிக்கத் தூதரகமே தூள்தூளாக உடைக்கப்பட்டிருந்தாலும் அது தினமணிக்கு ஓகேதான், அப்படித்தானே! ஐந்து நாட்களாக  போராட்டம் தொடர்ந்ததுதான் பிரச்சனைபோலுள்ளது. எதிர்காலத்தில் தினமணியின் ஆதரவை விரும்பும் போராட்டக்காரர்கள் கவனிக்க வேண்டிய நெறிமுறை இது!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்படுத்திய போதும், அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காகச் சென்ற நடிகர் ஷாரூக் கானை பரிசோதனைக்கு உள்படுத்தியபோதும் இந்திய முஸ்லிம்கள் மனக்கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் போராட்டம் அரசியல் காரணிகளைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது

கோணல் நடையும் கோணல் பார்வையும் கொண்ட தினமணிப்பூனை சாக்கை விட்டு இங்கேதான் வெளியே வருகிறது! நபிகள் நாயகத்துக்காக மனக்கொதிப்புக்கு ஆளாகும் முஸ்லிம்கள் அப்துல் கலாமுக்காகவும் ஷாருக்கானுக்காகவும் ஏன் கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதுதான் தினமணிக்கு புரியவில்லை! கேவலப்படுத்தும் வேலையை ரொம்ப நுட்பமாக இங்கே தினமணி செய்கிறது.

காஞ்சிபுரத்துக்குச் சென்ற ஜனாதிபதி அப்துல்கலாம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலும் பெயிலுமாக  அலைந்துகொண்டிருக்கும் ஜெயேந்திரரைப் பார்த்து ஆசிபெற்றார். போனவர், பவ்யமாகத் தரையில் உட்கார்ந்து கொண்டார். ஜெயேந்திரர் வழக்கம்போல நாற்காலியில் அமர்ந்தோ அல்லது நின்றுகொண்டோ அவருக்கு ஆசி வழங்கியிருப்பார். சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஜனாதிபதியாக அப்துல்கலாம் அன்று செயல்பட்டார். ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதை ஏனோ மறந்துபோனார்.

குர்’ஆனை நான் ஏன் படிக்க வேண்டும்? என் மதத்தில் உள்ளவற்றை மட்டும் நான் தெரிந்துகொண்டால் போதும் என்ற ரீதியில் ஜெயேந்திரர் ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னார். உலகளாவிய ஒரு மார்க்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட விரும்பாத ஜெயேந்திரரிடம் ஆசி பெறவேண்டிய அவசியம் அப்துல்கலாமுக்கு என்ன ஏற்பட்டது? மரியாதை இழப்பை மரியாதையாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது!

ஏவுகனை விஷயத்தில் வேகமாகச் செயல்பட்ட அப்துல்கலாமின் நியோகார்டக்ஸ் சமுதாய நடைமுறைகளில் தூங்கிவிட்டது. பிரபலமான ஜனாதிபதி என்று பெயர் எடுத்தாரே தவிர முஸ்லிம்கள் மெச்சும் முஸ்லிம் என்று அவர் பெயர் எடுக்கவில்லை.

ஷாருக்கான் ஒரு அருமையான நடிகர். அவருடைய ”மை நேம் ஈஸ் கான்” அற்புதமான படம். சந்தேகமே இல்லை. அதுபற்றி ”நமது முற்றம்” பத்திரிக்கையில் நாம் விமர்சனம்கூட எழுதியிருக்கிறேன். ஒரு விவாதத்தில் பேசும்போது, முஸ்லிமென்றால் தாடி வைக்கத்தான் வேண்டும் என்று டாக்டர் ஜாகிர்  நாயக் சொல்ல, “Do you want to look Muslim or feel Muslim?” என்று ஒரு அழகான கேள்வியையும் ஜாகிருக்கு பதிலாகச் சொன்னார் ஷாருக். அதெல்லாம் சரி.

இஸ்லாத்தில் இசைக்கு, திரைப்படத்துக்கெல்லாம் ஆதரவுண்டா என்ற கேள்விக்குள் நாம் இப்போது போகவேண்டாம். அது விரிவான விவாதத்துக்கு இட்டுச்செல்லும். உண்டு என்றும் இல்லை என்றும் விவாதம் செய்யலாம். அதெல்லாம் விளக்கங்கள் சார்ந்தது. ஆனால், விளக்கம் தேவைப்படாத, தெளிவான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு விரோதமாக, கௌரி சிப்பர் என்ற ஹிந்துப் பெண்ணை ஹிந்துமத முறைப்படி திருமணம் செய்தார் ஷாருக்கான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஹிந்து கடவுளர்களின் பூஜையறையில் திருக்குரானும் இருப்பதாக விக்கி கூறுகிறது.

ஒருதட்டில் அப்துல் கலாம், ஷாருக் கான். இன்னொரு தட்டில் நபிகள் நாயகம். ஒரு தட்டுக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் சமுதாயம் ஏன் இன்னொரு தட்டைக் கவனிக்கவில்லை என்று தினமணி கேட்கிறது! யாரோடு எப்படிப்பட்டவர்களை இணைக்கிறது என்று புரிகிறதா?

The Hundred என்று உலகப்புகழ் பெற்ற ஒரு நூலை மைக்கேல் ஹார்ட் எழுதினார். அதில் உலகில் மகத்தான சாதனைகள் செய்த நூறு பேரை அவர் பட்டியலிட்டார். அதில் முதல் ஆளாக அவர் வைத்தது நபிகள் நாயகத்தை! ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் அவர் இந்த காரியத்தைத் துணிந்து செய்தார். ஏன் அப்படிச் செய்தார் என்ற விளக்கமும் கொடுத்தார்.

அந்த நூலைப்பற்றிப் பெருமையாக நான் என் ஊரைச்சேர்ந்த அண்ணன் கவிஞர் ஜஃபருல்லா நானாவிடம் சொல்லியபோது அவர் அதை சிலாகிக்கவில்லை. ஏன் என்று நான் கேட்டேன். முதல் ஆளாக வைத்தாலும் நூறு பேரில் ஒருவராகத்தானே சொல்கிறார் என்று கேட்டார்!

அதுதான் ஒரு உண்மையான முஸ்லிம் இறுதித்தூதர்மேல் கொண்ட மதிப்பு. ஈடு இணையற்ற ஒரு மாமனிதராகத்தான் நாங்கள் அவரைப் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, நபிகள் நாயகத்துக்கு இணையாக வைத்துப்பேச முடிகிற மனிதர் இந்த உலகில் ஒருவர்கூட இல்லை. அவர்களுடைய மகத்துவமும் குணாம்சமும் அப்படிப்பட்டவை.

If any religion had the chance of ruling over England, nay Europe within the next hundred years, it could be Islam. I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him – the wonderful man and in my opinion far from being an anti-Christ, he must be called the Savior of Humanity.

I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today.”

The Genuine Islam என்ற நூலில் இப்படிச் சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. மனிதகுலத்தைக் காக்க வந்தவர் என்றும், அவரைப் போன்ற ஒரு மனிதரிடம் இந்த நவீன உலகத்தின் ஆட்சியை ஒப்படைத்தால், அது நமக்கெல்லாம் தேவைப்படும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவந்துவிடும் என்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி ஷா கூறுகிறார்! ஷா மட்டுமல்ல, அறிவார்ந்த தளத்தில் உண்மையிலேயே இயங்கிய வில்லியம் முய்ர், எட்வர்ட் கிப்பன் போன்ற பல மேனாட்டு அறிஞர்களும் இதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தினமணிகளின் விஷமத்தனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன்.

கும்பலாக, கூட்டமாக எந்தக் காரியம் செய்யப்பட்டாலும் அங்கே உணர்ச்சி மிகைத்து நிற்கும் என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அது நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி. ஒரு சின்ன நெருப்பு, வீடு முழுவதையும் எரித்துவிடும் அபாயம் உண்டு. நம்முடைய தூதரைக் கேவலப்படுத்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

இங்கேயும் நாம் நபிகள் நாயகத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

தனக்கு விஷம் வைத்த யூதப்பெண்ணை நாயகம் மன்னித்தது வரலாறு. போரில் பிடிபட்ட கைதிகளை என்ன செய்யலாம் என்ற கேள்வி வந்தபோதெல்லாம் கொன்றுவிடலாம் என்று உமரும், மன்னித்துவிடலாம் என்று அபூபக்கரும் கூறுவார்கள். நாயகமவர்கள் எப்போதும் மன்னிப்பையே தேர்ந்தெடுத்தார்கள். தாயிப் நகரத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்க நாயகம் சென்றபோது அவர்கள் கல்லால் அடித்து விரட்டப்பட்டார்கள். ஆனால் அடித்தவர்களை சபிக்கவில்லை. அவர்களுக்குப் பின்னே வரும் சமுதாயம் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். தொழுது கொண்டிருந்தபோது அவர்களின் கழுத்தில் ஒட்டகக் குடலைப் போட்டு இறுக்கிக் கொல்ல முயன்றவர் உண்டு. ஆனால் மக்காவை வெற்றி கொண்டபோது ஒரு துளி ரத்தம்கூட சிந்தப்படவில்லை. நிராயுதபாணியாக இருப்பவர்களை, வயதானவர்களை, பெண்களை, குழந்தைகளை, சரணடைபவர்களை – இப்படி யாரையும் தாக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்கள். மன்னிப்புக்கு ஒரு உருவம் கொடுக்க முடியுமென்றால் அது நபிகள் நாயகமாக இருக்கும் என்பதைத்தான் அவர்களது வரலாறு காட்டுகிறது.

வட நாட்டில் ஒரு பாதிரியாரையும் ஒரு சிறுவனையும் உறங்கிக்கொண்டிருந்த வேனோடு எரித்துக் கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக அச்சிறுவனின் தாய் சொன்னதை இந்த உலகம் மறக்க முடியாது.

நாயகமவர்களைக் கேவலப்படுத்த முயற்சி நடந்துள்ளது. புனை பெயருக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தக் கோழைகளை மன்னிக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் துணிச்சலாக வெளிவருவார்களேயானால் நிச்சயமாக அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுக்கப் போராடலாம். நமது நியாயமான கோபத்தை  வெளிப்படுத்தத்தான் வேண்டும்.

அதேசமயம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அக்காரியத்தைச் செய்தால் அதுதான் ’இமோஷனல் இண்டெலிஜெண்ட்ஸ்’ என்று சொல்லப்படும் அறிவார்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக  இருக்கும். யாருக்கோ சொந்தமான இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைக் கொளுத்துவது, கண்ணாடிகளை உடைப்பது, தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது, அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவது போன்ற செயல்கள் நம் பிரச்சனையைத் தீர்க்க நிச்சயம் உதவாது.

அவசரமாக மருத்துவமனைக்குக்  கொண்டு செல்ல  வேண்டிய நோயாளிகள், அல்லது பிரசவ வேதனையுடன் தவிக்கும் பெண்கள், பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் – இப்படி எத்தனையோ பேர் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்த போராட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதே போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு, வேற்று மதத்தவரால் நமக்கு இத்தகையை இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் நாம் என்ன சொல்வோம்?

இதைத்தான் டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்களும் அவர் பாணியில் சொன்னார். எதிர்வினை பற்றியே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதைத்தூண்டிய முதல் வினைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறீர்களே என்றார்.

சகோதரர்கள் பொறுமை காக்க வேண்டும். யோசிக்க வேண்டும். எதிர்வினை அவசியம்தான். அது இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வழியில் இருக்க வேண்டும். அவ்விதம் நமது செயல்பாடுகள் இருக்குமானால் எதிர்காலத்தில் இஸ்லாத்துக்கு எதிரான குப்பைகளை அல்லாஹ் நீக்குவான். அதற்கான சாத்தியக்கூறு நிச்சயம் ஏற்படும். இஸ்லாத்தின் புகழ் மேன்மேலும் ஓங்கும். இன்னல்லாஹ ம’அஸ்ஸாபிரீன். நிச்சயமாக பொறுமையாளர்களோடு நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அன்புடன்

நாகூர் ரூமி

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book