15

kavikoதிரைப்படத்துக்குப் பாடலெழுத ஒரு கவிஞனை அழைப்பது ஒரு சிற்பியை அம்மி கொத்தச் சொல்வதைப் போன்றது என்று ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் ரொம்ப அழகாகச் சொன்னார். அந்தப் பிரச்சனை பற்றி இதைவிட அழகாகவும் மிகச்சரியாகவும் சொல்லமுடியுமா என்பது சந்தேகம்தான். என்றாலும் அம்மி கொத்துவது சிற்பக்கலையைவிட மட்டமானது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது அது. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அது சரி. அம்மி கொத்துவதையே அழகாகச் செய்ய முடியுமானால்?! கவிஞனாகவும் திரைப்படப் பாடலாசிரியனாகவும் இருக்கின்ற ஒருவனுக்கு முன்னால் இருக்கும் சவால் இதுதான்.

ஆனால் அப்படிச் செய்வது சாத்தியமா என்றால் முழுக்க முழுக்க சாத்தியமில்லை. ஆங்காங்கு சாத்தியம். அவ்வப்போது சாத்தியம். அப்படியானால்  ஏன் அதைச் செய்யவேண்டும்? கவிதை எழுதுவதும் அப்படித்தான். ஒரு மகா கவிஞனின் ஒவ்வொரு கவிதை வரியும் மகத்தானதாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி இருப்பதும் இல்லை. பாரதியோ, ப்ளேக்கோ, கம்பனோ, கீட்ஸோ எல்லோருக்கும் இது பொருந்தும். ஒரு நீண்ட கவிதையில் ஆங்காங்கு சில பொறிகள் இருக்கும். அவ்வளவுதான். அதற்காகத்தான் அந்தக் கவிதை கொண்டாடப்படும். அந்தப் பொறிகள்தான் மேற்கோள் காட்டப்படும். எனவே அம்மிகொத்துவதைப் பற்றிச் சிற்பிகள் கவலைப்படவேண்டியதில்லை. அதைப்போல சிற்பங்களிலும் ஆங்காங்கே அம்மிபோல கொத்தப்பட்டிருப்பதைப் பற்றியும் நாம் பேசவேண்டியதில்லை!

Picture 078அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் பாடலாசிரியர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். கவிஞர்களைவிட அதிகாமான பொறுப்புணர்வு கொண்டவர்கள் என்று சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் ஒரு திரைப்படப் பாடலாசிரியருக்குக் கிடைப்பதில்லை. பல நேரங்களில் பலவிதமான சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” என்ற ஆட்டோகிராஃப் படத்தின் பா.விஜய்யின் பாடல் தேசிய விருது பெற்றது நமக்குத் தெரியும். ஆனால் முதல் வரியே இலக்கணப் பிழை கொண்டது. “ஒவ்வொரு பூவுமே” என்பதுதான் சரியாக இருக்கும். ஒருமையும் பன்மையும் ஒருசேர அந்த வரியில் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. அது அப்படித்தான் வரவேண்டும். அந்த மெட்டு அப்படி. மெட்டுக்காக செய்யப்பட்ட இலக்கணத் தியாகம் அது. அதனால் என்ன? ரசிக்கிறோமா இல்லையா? அதுதான் முக்கியம்.

அம்மி கொத்தும்போதே அதில் சின்னச் சின்ன சிற்பங்களை ஆங்காங்கு நுட்பமாகச் செதுக்க ஒரு கலைஞனால் முடியும். அதைத்தான் கண்ணதாசன், கா.மு. ஷரீஃப், வாலி, வைரமுத்து போன்ற ‘பெரிசுகள்’ செய்தன. இப்போது பல இளங்கவிஞர்கள்-திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர்களின் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்  இருவர்: ஒருவர் நா.முத்துக்குமார். இன்னொருவர் யுகபாரதி. இவர்கள் வருங்காலப் பெரிசுகள்!

nmஅவள் அப்படியொன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் பெரிதாய் எதுவும் படிக்கவில்லை, அவளைப் படித்தேன், முடிக்கவில்லை

என்று முரணழகு சொட்டும் பாடலை எழுதியவர் நா.முத்துக்குமார். அவரோடு எனக்கு அதிகமாகப் பழக்கம் கிடையாது. ஓரிரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு இனிமையான, எளிமையானவர் என்று புரிந்துகொண்டேன். அதோடு, சினிமாத்துறைக்கு வந்தால் ஒட்டிக்கொள்ளும் உயிர்கொல்லிப் பழக்கங்கள் எதுவும் இல்லாதவர் என்று கேள்வி. அதேபோன்ற இன்னொரு திறமைசாலிதான் யுகபாரதி. யுகபாரதியைப் பற்றி எழுதுவதில் எனக்கொரு சங்கடம் உண்டு. அவர் என் நெருங்கிய நண்பர். என்றாலும் மிகவும் யோசித்து ஒரு பதிவு இருக்கட்டுமே என்று முடிவுசெய்தே இதை எழுதுகிறேன்.

யுகபாரதி அடிப்படையில் ஒரு கவிஞர் மட்டுமல்ல. பன்முகத்திறமைகள் கொண்ட ஒரு படைப்பாளி. கவிதை, ybகட்டுரை, விமர்சனம், இதழியல் (படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்), புத்தகப்பதிப்பு (நேர்நிரை), திரைப்படப்பாடல், சொற்பொழிவு என பல தளங்களில் தன்னை நிறுவியவர். நிறுவிக்கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்து இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகளும் ஏழு கட்டுரைத்தொகுதிகளும் வெளி வந்துள்ளன. எல்லா நூல்களுமே அவருடைய ”நேர்நிரை” பதிப்பக வெளியீடாக வந்தவை. ”தெருவாசகம்” மட்டும் முதலில் ஆனந்த விகடனில் பிரசுரமாகி பின்பு விகடன் வெளியீடாக வந்தது. பல கட்டுரைகளும் கவிதைகளும் பிரபலமான நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தவை.

1.மனப்பத்தாயம், 2. தெப்பக்கட்டை, 3. பஞ்சாரம், 4. தெருவாசகம், 5. ஒரு மரத்துக்கள்,

6. நொண்டிக்காவடி. 7. கனவுகளின் கைநாட்டு ஆகியவை கவிதை நூல்கள். மரபு மற்றும் புதுக்கவிதைகள்.

1.அதாவது, 2. கண்ணாடி முள், 3. நேற்றைய காற்று. 4. வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள், 5. காதல் பிசாசே, 6. நானொருவன் மட்டிலும், 7. நடுக்கடல் தனிக்கப்பல் — ஆகியவை கட்டுரைத் தொகுப்புகள்.

பல் வேறு காலகட்டங்களில்,   சங்க இலக்கியம், மரபுக்கவிதை,  நவீன இலக்கியம், கவிஞர்கள், தலைவர்கள், திரைப்படப் பாடல்கள்,– இப்படிப் பலவிஷயங்களைப் பற்றி எழுதப்பட்டவை. அவருடைய எழுத்தின் அழகையும், ஆளுமையையும், வாசிப்பு அனுபவத்தையும் இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

Kadhal Pisase“இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கே இருக்கும்? காலத்தால் அழியாது போகவே பெண்களி கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அது மடித்துவைக்கப்பட்டிருக்கும்” (காதல் பிசாசே, பக்கம் 18) என்று அழகாகக் கூறமுடிகிற ஒரு படைப்பாளியை நாம் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? திரைப்படப்பாடலுக்கு அடிப்படை “கவிதை மனம்” என்று ஒரு கட்டுரையில் (வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள், பக்கம் 70) கூறுகிறார். அந்தக் கவிதை மனதை அவர் பாடல்களில் கண்டுபிடிக்கும் முயற்சிதான் இக்கட்டுரை.

2001ம் ஆண்டு தொடங்கியது யுகபாரதியின் திரைப்படத்துறை சார்ந்த வாழ்வும் வாய்ப்பும். அந்த ஆண்டுதான் ”ஆனந்தம்” என்ற படம் வெளிவந்தது. அதில் வரும் ஹரினி, உன்னி கிருஷ்ணன் பாடிய ”புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்ற பாடலில் தொடங்குகிறார் யுகபாரதி. தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் ஆமை மீது ஏறித் தொடங்கிய அந்த பயணம், இப்போது விமானத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது! ஆம். இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை 300 மேற்பட்ட படங்களுக்கு எழுதிவிட்டார் யுகபாரதி! பல பாடல்கள் ஹிட்டோ ஹிட்! திரைப்படப் பாடல்கள் மட்டுமல்ல. சன், விஜய் தொலைக்காட்சிகளில் வந்த, வரும் பல நெடுந்தொடர்களுக்குப்  பாடலும் இவரே. மதுர, பிரிவோம் சந்திப்போம், அழகி, செல்வி, திருமதி செல்வம் ஆகியவை சில உதாரணங்கள்.

கணையாழி பத்திரிக்கையில் அவர் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் கட்டுரை, கவிதை எழுதி கணையாழிக்குக் கொடுக்கப் போகும்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்படி ’ஆனந்தம்’ படத்துக்கு எழுதினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் நினைவிருக்கிறது. “சில்லறை மாற்றுவதற்காக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்த மாதிரி” என்றார்! என்ன ஒரு கவித்துவமான பதில்!

anandam1யுகபாரதியின் முதல் பாடலையே எடுத்துக்கொள்வோம். காதலன் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு நாயகி பாடுவதாக வரும் பாடல் அது.  எனக்குத் தெரிந்து “ஒற்றை நாணயம்” என்ற தூய தமிழ்ச்சொல் வந்திருப்பது திரைப்படப் பாடல் வரலாற்றில் அதுதான் முதன் முறை என்று நினைக்கிறேன். அந்த சொல்லுக்காகவே ஒரு ஆறு மாதம் அந்த பல்லவியோடு யுகபாரதியை மறந்துவிட்டு படக்குழுவினர் இயங்கினர். கடைசியில் இறைவனின் திட்டப்படி, அந்தப் பாடல் வரிகளைத் தவிர வேறு எதுவும் அந்த மெட்டுக்கு சரியாக வராததால், யுகபாரதியை மீண்டும் அழைத்து சரணங்களை எழுதச் சொல்லினராம். படத்தின் ப்ரோமோ காட்டும்வரை அந்தப் பாடலை இணைப்பதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் காணாமலே இருந்துள்ளனர் படக்குழுவினர். பாடல் ஹிட் ஆனபிறகுதான் நல்ல தமிழ்ச்சொல்லின் மகத்துவமும் நல்ல கவிஞனின் திறமையும் எல்லாருக்கும் புரிந்தது! முடிந்தபோதெல்லால் தன் பாடல்கள் மூலமாக தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த யுகபாரதி முயல்கிறார்.

pokkishamசிவப்பதிகாரம் என்ற படத்தில் “அற்றைத் திங்கள்” என்றொரு பாடலும் அப்படிப்பட்டதுதான். பொக்கிஷம் படத்தில் வரும் “நிலா, நீ வானம் காற்று” என்ற பாடலும் இப்படிப்பட்டதுதான். அதில் வரும் சில சொற்கள்:

“இதில் யாவுமே நீதான் எனினும் / உயிரென்றே உனைச் சொல்வேனே நான்

நாம் என்பதே இனிமேல் மெய்சுகம்

அன்புள்ள மன்னா, அன்புள்ள கணவா, அன்புள்ள கள்வனே, அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒலியே, அன்புள்ள தமிழே, அன்புள்ள செய்யுளே, அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே, அன்புள்ள நற்றினையே / அன்புள்ள படவா, அன்புள்ள திருடா, அன்புள்ள ரசிகா, அன்புள்ள கிறுக்கா… / அன்புள்ள அன்பே” என்று செல்லும் அந்தப் பாடல்.

With YB Vikramadityan1எனக்குத் தெரிந்து செய்யுள், திருக்குறள், நற்றினையோடெல்லாம் காதலர்கள் தங்களை ஒப்பிட்டுச் சொல்லும் பாடல் இதுவரை வந்தது கிடையாது. தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் யுகபாரதி கொண்டுள்ள காதலை இது வெளிப்படுத்துகிறது. (அந்தப் பாடலை டெல்லிக்கு அனுப்புவதற்காக நான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துகொடுத்த அனுபவமும் எனக்குண்டு).

யுகபாரதியின் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பேசிய இயக்குனர் சேரன் இப்பாடல் பற்றி ஒரு சுவையான விஷயத்தைக் குறிப்பிட்டார். ”அன்புள்ள அன்பே” என்று கடைசியில் முடித்திருந்ததன் ரகசியம் தனக்கு யுகபாரதியின் திருமண அழைப்பிதழைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது என்று சொல்லிவிட்டு, அவருடைய (வருங்கால) மனைவியின் பெயரான ”அன்புச் செல்வி”  என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டதாகச்  சொல்லி கைதட்டல் வாங்கினார்! ஒரு பாடலுக்குள் எவ்வளவு நுட்பங்கள் உள்ளன என்று பாருங்கள்!

யுகபாரதிக்கு ஒரு வித்தியாசமான ராசி உண்டு. நமக்கெல்லாம் எது அபசகுனமாக இருக்குமோ அதுவே அவருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்! ஆமாம். ”அய்யோ”  என்ற சொல் அமங்கலமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் யாராவது ‘அய்யோ’ என்று கத்தினால், “அய்யோ என்று சொல்லாதே, அல்லாஹ் என்று சொல்” என்று சொல்வார்கள். இதையொத்த எச்சரிக்கைகளை மற்ற சமூகத்தவர்களும் செய்வார்கள். நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் யுகபாரதிக்கு “அய்யோ” என்ற சொல் ராசியான, மங்கலமான சொல்லாக மாறிவிட்டது. அல்லது அவர் அதை அப்படி மாற்றிவிட்டார்!

mkumaran“அய்யோ, உன் கண்கள் அய்யய்யோ, உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அய்யய்யோ / அய்யோ

 

, அய்யோ, அய்யோடா அய்யய்யோ, நீ என்னைக் கண்ட நேரத்தில் மின்சாரம் அய்யய்யோ”  என்ற பாடல் ”எம்.குமரன்” படத்தில் வருகிறது. இது அவருடைய ஹிட் பாடல்களில் ஒன்று. வார்த்தைகளால் சொல்லமுடியாத காதலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக இங்கே ‘அய்யோ’ மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

”அய்யய்யோ யோ ஆனந்தமே”  என்பது ”கும்கி” படத்தின் ஹிட் பாடல்களில் ஒன்று. “காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்றொரு வரி அதில். தூரல் போட்டு யாரும் அதில் மூழ்கிப் போகும் வாய்ப்பு கிடையாது. ஆனால் காதல் தூரல் வித்தியாசமானது. அது தூரல்தான் என்றாலும் நடுக்கடல் போல ஆழமானது அது. அதில் காதலர்கள் மட்டுமே மூழ்கிப்போவார்கள்!

உன்னை முதல் முறை கண்ட நொடியினில் / தண்ணிக்குள்ளே விழுந்தேன்kumki1

அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல / ”மெல்ல மெல்லக் கரைந்தேன்”

கரை சேர நீயும் கையில் ஏந்த வா / உயிர் காதலோடு நானும் நீந்தவா ( பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ )

என்ற வரிகள் வரும்.  முதன் முதலாக நாயகி யானையைக் கண்டு பயந்து குளத்தினுள் விழுந்துவிடுவாள். அதைப் பார்க்கும் நாயகனும் தண்ணீருக்குள் குதிப்பான். இது காட்சி. இப்போது பாடல் வரிகளைக் கேளுங்கள்.  ”அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல” என்பது புதிய அர்த்தம் கொடுக்கும். வரிகளுக்குள் கதையும் வருகிறது, காதலும் வருகிறது. அதோடு, கரைதல் என்பது தண்ணீரோடு இணைந்த ஒரு காரியமாகும். ”மெல்ல மெல்லக் கரைந்தேன்”என்பது காதலில் கரைவதையும், நீரினுள் விழுந்தததைக் குறிப்பதையும் கவனிக்கவேண்டும். காதல் என்ற முக்கிய தளத்தோடு கதை என்ற தளத்தையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறது பாடல்.

kumki3இந்தமாதிரி கதையோடு அழகாக பின்னிப் பாடல்களை எழுதும் திறமை கண்ணதாசனுக்குரியது. உதாரணமாக ”அவர்கள்” என்ற படத்தில் நாயகியின் காதலனும், அவளது கணவனும், ஒரே இடத்தில் அவள் உடல் நலத்தை கவனிக்க ஒன்றுகூடுகிறார்கள். அப்போது எஸ்.பி.பி. பாடும் ”அங்கும் இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்தப் பக்கம்” என்ற பாடலில் ”கண்ணா என்றாள் முருகன் வந்தான், முருகா என்றாள் கண்ணன் வந்தான் / எந்த தெய்வம் சொந்தம் என்று பூஜை செய்குவாள்” என்று பாடல் வரிகள் வரும்! அந்த வகையில் கவியரசின் வாரிசாக யுகபாரதி எழுதுகிறார்!

ஜெயங்கொண்டான்” படத்தில் ஒரு பாடல். ஹரிஹரன் பாடியது. காதலுக்கு காதலி சம்மதம் சொன்னபிறகு என்ன நடக்கிறது?

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதேjeyamkondan

நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்களானதே

என் தலை நனைத்த மழைத்துளி அமுதமானதே

நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

ஆமாம். காதல் ஒரு அற்புத சக்தி. அது ஓவியத்தில் இருக்கும் சூரியனையும் ஒளிர வைக்கும். மணல் வெளியையும் பூக்களாய் மலரவைக்கும். எல்லாவற்றுக்குமே காதல் உயிர் கொடுத்துவிடுகிறது! காதலின் அற்புத சக்தியை இதைவிட அழகாகச் சொல்லமுடியுமா என்ன?

run’ரன்’ படத்தில் வரும் ”காதல் பிசாசே” என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். ’காதல் பிசாசே’ என்ற சொல்லாடல் பழைய இலக்கியத்திலிருந்து கிடைப்பது. ஆனால் அதில் வரும் பல வரிகள் கவித்துவமிக்கவை. காதலை அழகாகச் சொல்பவை. “என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி” என்று அவன் பாட, “என் ஸ்வாசத்தில் ஆண் வாசம் நீ என்று ஆனாயடா” என்று அவள் கூறுகிறாள். ”என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய்”, “நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய்” என்று மாறிமாறி அவர்கள் பாடிக்கொள்வார்கள்.

மீசைக்குப் பூவாசமும், ஸ்வாசத்தில் ஆண் வாசமும் காதலிம் நெருக்கத்தை அழகாகச் சொல்கின்றன. காதல் தரும் அனுபவம், அந்த சுகம் யாரோடும் பகிர்ந்த கொள்ள முடியாதது. பகிர்ந்துகொள்ள விரும்பாததும்கூட. அது தாயோடுகூட பேசமுடியாத மௌனத்தையும், யாரோடும் பேசமுடியாமல் நினைத்து நினைத்து சந்தோஷத்தில் இருக்கக்கூடிய ஒரு முத்தத்தையும் கொடுக்கவல்லது!

Parthiban Kanavu”பார்த்திபன் கனவு” என்ற படத்தில் வரும் “கனாக் கண்டேனடி”என்று ஒரு அருமையான பாடல். மது பாலகிருஷ்ணன் பாடியது. அதில் ”ஒரு கண்ணில் அமுதம் கண்டேன், மறு கண்ணில் அமிலம் கண்டேன். எங்கெங்கோ தேடித்தேடி உன்னில் என்னை நான் கண்டேன்” என்று வரிகள் காதல் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் பாரம்பரிய படிமத்தின் தொடர்ச்சியை அழகாகச் சுட்டுபவை.

காதலி என்பவள் சமயங்களில் அன்பாகவும், சமயங்களில் கோபமாகவும் இருப்பாள். இதைச் சொல்லாத உலக இலக்கியமே இல்லை.  ஜக்ஜித் சிங் பாடிய ”தில் கெ தீவாரோன் தர் பெ க்யா தேக்கா” (இதயச் சுவரில் என்ன பார்த்தாய், உன் பெயர்மட்டும் எழுதி இருந்ததைப் பார்த்தேன்) என்ற கஜலில் ஒரு வரி வரும். ”தேரி ஆங்கோன் மெ ஹம்னெ க்யா தேக்கா / கபி காதில் கபீ ஹுதா தேக்கா” என்று. அதன் பொருள்: “சமயங்களில் எமனையும், சமயங்களில் இறைவனையும் பார்த்தேன்” என்று கொள்ளலாம். சுதர்ஷன் ஃபாகிர் எழுதிய புகழ்பெற்ற கஜல் அது. அந்த  பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக யுகபாரதியின் வரிகளைப் பார்க்கலாம். உர்துவில் ”காத்தில்”, ”ஹுதா” என்று வருவதுபோலவே தமிழில் அவர் ”அமுதம்”, “அமிலம்” என்று சொல்லியிருப்பதும், ஒன்றில் வாழவைக்கும் குணமும், இன்னொன்றில் சாகடிக்கும் குணமும் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

”பொறி” என்ற படத்தில் ஒரு பாடல்.With YB

“பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் / பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம் / விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் / விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்” என்று.

அருமையான பாடல். மதுபாலகிருஷ்ணனும் மதுஸ்ரீயும் பாடியது. பேருந்தில் ஜன்னலோரம் என்பது சிறப்பானதொரு இடம். அது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கணையாழியில் பேருந்தில் தஞ்சாவூரில் இருந்து நாகூர் செல்வது பற்றி ”ஒரு மாலைப்பொழுதில்” என்று ஒரு சிறுகதை எழுதினேன். அதில் எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கையில்தான் அமர்ந்து போவேன். (கதையிலும்). அந்த இடத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன். ஒரு வேளை, ஒரு காலத்தில் எனக்காக வர இருக்கும் அவளுக்காக வேண்டுமானால் விட்டுகொடுக்கலாம் என்று எழுதியிருப்பேன். அது நினைவுக்கு வந்தது. காதல் உணர்வு என்பது பிரபஞ்சம் முழுக்கவும் பொதுவாகத்தான் இருக்கும் என்பதை இந்த வரிகளும் எனக்கு உறுதிசெய்கின்றன.

ஆனால் “தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீதானே” என்ற வரியோடு நான் உடன்படவில்லை.”காத்துக் கிடத்தல்”  என்ற விஷயத்துக்கு அது சரி என்றாலும், படித்த பின்னர் தூக்கிப் போடப்படுதல் என்ற அர்த்தத்தில் அது சரியானதாக இல்லை.  ஒருவேளை காதலர்களின் கதி காதலின் நிறைவேற்றத்துக்குப்பின் அதுதான் என்று யுகபாரதி சொல்ல வருகிறாரோ என்னவோ!

images”மைனா” படத்தில் (எல்லாப்பாடல்களும் இவரே) ’மைனா மைனா’ என்ற பாடலில்

சிம்னிக்கு மண்ணெண்ணெயப் போல / சித்திரைக்கு உச்சி வெயில் போல

நீயும் எனக்காக / உயிர் வாழ்வேன் ஒனக்காக

சக்கரத்தைப் போல சுத்தி வரும் ஆசெ / கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீசெ

அடியே நீ மணலெ திரிச்ச கயிறா / கொடியே நீ உசுரெ கடஞ்ச தயிரா – என்ற வரிகள் வரும்.

இந்தப்பாடலில் “உசிர கடஞ்ச தயிரா” என்ற வரி அதற்கு முந்தைய வரியோடு சந்தத்தில் சேருகிறது என்பதைத் தாண்டி, அவனது உயிரைக் கடைந்து எடுத்த தயிர் அவள் என்று சொல்வதன் மூலம் அவனுக்காக உயிரைக்கொடுக்கும் அவளது பாத்திரத்தோடு ஒன்றிப்போகிறது. சிம்னி, மண்ணெண்ணெய் போன்ற அன்றாடம் நம் வழக்கில் உள்ள சாதாரண சொற்களைப் பாடல்களுக்குப் பயன்படுத்துவதில் யுகபாரதிக்கு முதல் பரிசு கொடுக்கலாம்.

”கருப்புசாமி குத்தகைக்காரர்” என்ற படத்தில் பாம்பே ஜயஸ்ரீ பாடும் ”உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது” என்று ஒரு பாடல். அதில் “கண்ணுரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது” என்று ஒரு வரி. கண்களும் கண்ணீரும் பிரிக்க முடியாதபடி வாழ்நாள் முழுவதும்  துயரமாக மாறிவிட்ட ஒரு கசப்பான, உப்புக்கரிப்பான நிஜத்தை இதைவிட சிறப்பாகச் சொல்லமுடியுமா? “வாக்கப்படுவது” என்ற சொற்றொடர் நமக்கு மட்டுமே புரிகின்ற, நம் கலாச்சாரம் சார்ந்த ஒரு விஷயம். பெண்கள் வாக்கப்பட்டுப் போவதன் பின்னணியில் உள்ள சோகங்களும் நாம் அறிந்தவையே.

Theruvasagamஇன்னொரு இடத்தில் / வேரொடு பிடுங்கி நடும்

பாரியத் துயரைப் / பெண்களைப் போல

உணரமுடியாது / ஆண்களால்

என்று நாற்று நடுபவள் பற்றிய அவர் சிந்தனையை (தெருவாசகம்) இங்கே சேர்த்து சிந்தித்துப் பார்க்கலாம். வாக்கப்பட்டுப் போவதன்மீதான விமர்சனமாகவும் இதை நாம் பார்க்கமுடியும்.

”சாட்டை” படத்தில் (எல்லாப் பாடல்களும் இவரே) “அடி ராங்கி” என்ற பாடலில்

அன்னந்தண்ணி தேவையில்ல ஒன்னப்பத்திப் பேசுனா

அட்ட கத்திகூட வெட்டும் ஒன்னெ சொல்லி வீசுனா

என்னெ ஓடா ஒடைக்கிறியே

காப்பி தண்ணி போல என்னெ கண்ணு ரெண்டும் ஆத்துதேsattai

மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே

உரிபோல குறி பாத்து என்னெ சில்லு சில்லா ஒடைக்கிறியே

என்னெ நாராக் கிழிக்கிறியே

போன்ற வரிகள் நம் சிந்தனைக்கு உரியவை. “அன்னந்தண்ணி”, “அட்ட கத்தி”, ”காப்பித்தண்ணி”, “பொத்துகிட்டு ஊத்துது”, ”சில்லு சில்லா உடைக்கிறியே”, “நாராக் கிழிக்கிறியே” – இவையெல்லாம் ஒரே பாடலில் ஒருசேர வருவது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

திருமலை என்ற படத்தில் மனதைப் பிழியும் விதத்தில் ஷங்கர் மஹாதேவன் பாடிய “நீயா பேசியது” என்ற பாடலை என் நண்பர் யுகபாரதி எழுதினார் என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். வித்யா சாகருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அப்பா, என்ன குரல், என்ன மெட்டு! ஹெட் ஃபோன் வைத்து அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தால் போதும். நம் துயரங்களையெல்லாம் மறந்து அதில் மூழ்கி ஆரோக்கியம் கொடுக்கும் நியூரோபெப்டைடுகளை நம் மூளைக்குள் அதிகம் சுரக்க வைக்கலாம். காதலிக்கவில்லை என்று பொய்சொல்லும் காதலியை நினைத்து பாடப்படும் அந்தப் பாடலில்

thirumalaiவேரில் நான் அழுதேன், என் பூவோ சோகம் உணரவில்லை

வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை

என்ற வரிகள் ரொம்ப அற்புதமானவை. காதலனின் அழுகையும் சோகமும் ரகசியமானதாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ காதலி அந்த சோகத்தை உணரவில்லை. அந்த அழகிய பூவை வாழவைக்கும் உயிர் நீராகக்கூட அந்த அழுகை இருக்கலாம். ஆனால் காம்பில் குடியிருக்கும் அந்தப் பூவால் அதை உணர முடியாது. ஏனெனில் அவன் வேரில் அழுதுகொண்டிருக்கிறான்!

கதா நாயகர்களுக்கு ஏற்றவாறு பாடல் வரிகள் எழுதுவதிலும் யுகபாரதி வல்லவர். ”பரமசிவம்” என்ற படத்தில் காதாநாயகன் அஜீத். ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்திருந்தார். ரொம்ப ஒல்லியாகி இருந்தார். ”ஒரு கிளி காதலி” என்ற பாட்டில் “யார் மீது ஆசை கூடிப்போக தேகமிளைத்தாயோ” என்று நாயகி கேட்பாள். அதற்கு நாயகன், “ நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ” என்று பதில் சொல்வான்! படத்தில் நீங்கள் அஜித்தைப் பார்த்தால்தான் இந்த வரியின் மகத்துவம் புரியும்!

konjaneram”சந்திரமுகி” படத்தில் வரும் “கொஞ்ச நேரம்” என்ற பாடலில் காதலன் பாடுவதாக ஒரு வரி:

“நீ என் நாடு / நான் உன்னோடு” என்று. அந்த வரிகளை நாயகன் ரஜினிகாந்த் பாடுவார். தமிழ்நாட்டை சிலாகிப்பதுபோல் வரி. ரொம்ப சரி.

யுகபாரதிக்கு இன்னொரு ராசியுண்டு. தமிழ் தெரியாத பாடகர்கள் பாடினால் பாடல் செம ஹிட்டாகிவிடும். ஆமாம். யுகபாரதியின் அனேக பாடல்களின் ஹிட்டானவை யுதித் நாராயணன் பாடியவை. சந்திரமுகியில் ஆஷா போன்ஸ்லே தமிழைக் கடித்துத் துப்புவார். ’ழ’அவருக்கு வரவே வராது. ”கண்ணில் ஓரலகு, கையில் நூறலகு, உன்னால் பூமியலகே” என்று பாடுவார். யுதித் நாராயணனோ, ”கில்லி” படத்தின் ”கொக்கரக்கொக்கரக்கோ”  பாடலில் ”உலகம் உனக்குப் பின்னாலே” என்ற வரியை ”ஒலுகம் ஒனுக்க பின்னாலே”  என்று பாடுவார்! சுத்தம்!

யுகபாரதியின் தெருவாசகம் என்ற அற்புதமான விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட நூலில் இருந்து உங்கள் சிந்தனைக்கு சில வரிகளை மேற்கோள் கொடுத்து முடித்துக்கொள்கிறேன்.

தண்ணீரில் / முட்டையிடுகிறது மீன்

கண்ணீரில் / குஞ்சு பொறிக்கிறாள் இவள் (மீன்காரி)

வயிற்றுக்கு மிக நெருங்கி / வருகின்ற கேமிராமில்

தெரியாது இவள் பசியும் / தெய்வத்தின் வஞ்சகமும் (துணை நடிகை)

ஓதுவதால் ஆயபயன் / ஒன்றுமில்லை என அறிந்து

ஊதுகிறான் ஓயாமல் / உயிர்மூச்சை விற்பதற்கு (பலூன் காரன்)

என்னிடம் இருப்பவைகள் / ஏழையின் புன்னகைகள்

என்பதை உரக்கச் சொல்லும் / இன்னொரு வேர்வை வேடன் (அடகு கடைக்காரன்)

ஊரடங்கும் நள்ளிரவில் / ஒட்டுகிறான் சுவரொட்டி

தான் மட்டும் உறங்காத / தகவலையும் தெரிவிக்க

இண்டு இடுக்கெல்லாம் / இருக்குமிவன் கைரேகை

கண்டு செல்பவர்கள்/ காண்பதில்லை கண்ணீரை (போஸ்டர் ஒட்டுபவன்)

அவரது மின்னஞ்சல்:

yugabhaarathi@gmail.com

yugabhaarathi@yahoo.co.in

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book