18

பிரகதி அருமையாகப் பாடக்கூடியவள். கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன், மெலடி எதானாலும் சரி. ஆனால் க்ராண்ட் ஃபினாலே அன்று அவள் முதலில் பாடிய கர்நாடக இசைப்பாடல் யாருக்குமே தெரியாதது. ஆடியன்ஸ் மௌனமாக இருந்தது அவளுக்கான பாராட்டு அல்ல. என்ன பாடுகிறாள் என்று புரியாததால் ஏற்பட்ட மௌனம். ஆடியன்ஸ் வாக்குகள்தான் முடிவைத் தீர்மானிக்கின்றன என்று தெரிந்த பிறகும் அப்படியொரு பாடலைத் தேர்ந்தெடுத்தது ஜாதி முட்டாள்தனம். சுதா ரகுநாதனுக்கும் ரமேஷ் வைத்யாவுக்கும் பிடித்த பாடல்கள் பாடுவதற்கான மேடையல்ல அது. ஆனால் இரண்டாவதாக ’மையா மையா’ பாடி சமாளித்துவிட்டாள். எல்லாருக்கும் தெரிந்த, அதே சமயம் சவாலான பாடல்களை அவள் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் மற்ற போட்டியாளர்களுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அழகான அவளிடம் இருக்கும் பிரச்சனை தேவையில்லாமல் improvise செய்வது, பாடும்போது ரொம்ப கஷ்டப்படுவது மாதிரியான பாவத்தில் முகத்தைச் சுருக்கிக் கொள்வது. ஆனால் முதல் பரிசுக்குத் தகுதியானவள்தான். ஆஜித் இல்லாவிட்டால்!

கௌதம் பாடிய ஒரே உருப்படியான பாட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம்-தான்.  மற்ற எல்லாம் சொதப்பல்தான். அதுவும் க்ராண்ட் ஃபினாலேயில் சுதி பிசகி, குரல் உடைந்து பாவம் அவனுக்கும் கஷ்டமாகிவிட்டது. அவன் அம்மா தலையைக் குனிந்துகொண்டே இருந்தார். தேவையில்லாத தலைகுனிவு.

சுகன்யா நன்றாகப் பாடக்கூடியவள்தான். ஆனால் க்ராண்ட் ஃபினாலேயில் இப்படி சுதியில்லாமல் சொதப்புவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  மின்சாரக்கண்ணா சகிக்கவில்லை. ரொம்ப பயந்துவிட்டாள் பாவம். நான்காவது ஐந்தாவது இடம் மிகச்சரியானதுதான்.

சின்னப் பெண் யாழினி மட்டும் கௌதம், சுகன்யாவைவிட சிறப்பாகப் பாடினாள். என்றாலும் கமகம், அகார சாதாகம், உச்ச ஸ்தாயி, சங்கீதம், ஸ்வரம் எல்லாம் பிடிபடும் வயது இன்னும் அவளுக்கு வரவில்லை. ஆஜித்தும் ஸ்வரங்கள் பாடக்கூடியவனல்ல. எனினும் யாழினி மூன்றாம் பரிசுக்குத் தகுதியானவளே.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ABsZXRp37l4

ஆஜித் முதல் பாடலைப் பாடும்போதே முடிவும் தெரிந்துவிட்டது. ஆடியன்ஸின் சந்தோஷமும் ஆரவாரமும் அப்படி. ஆஜித் காலிக் என்ற 11 வயது சிறுவன் வயதுக்கு மீறிய கட்டையில், ஸ்ருதி பிசகாமல், பாவத்துடன், வழக்கம்போல பயமறியாத கன்றுக்குட்டியாக அனாயாசமாக, சவால்களற்ற, சாதாரணமான இரண்டு ஏ ஆர் ரஹ்மான் பாடல்களைப் பாடி ஆடியன்ஸை ஸ்தம்பிக்க வைத்துவிட்டான். What a perfect pitching especially in high notes! ஏதோ அவன் உடம்புக்குள் ஜின் புகுந்துகொண்டு பாடிய மாதிரி இருந்தது. இவன் நம்ம வீட்டுப்பிள்ளையாக இருக்கக் கூடாதா என்று கேட்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் அளவுக்குப் பாடினான். ஓரிரு இடங்களில் மட்டும் உன்னிப்பாக கவனிக்க முடியாத அளவுக்கு ஸ்ருதி பிசகியது. ஆனால் அது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவில் உள்ளதல்ல. ஹரிஹரனோடு பாடும்போது இடையில் பாட்டை நிறுத்தி, “இவன் பாடுவதைப் பார்த்து எனக்கு பாடல்வரி மறந்துவிட்டது” என்று ”அன்பே அன்பே” பாடிய ஹரிஹரன் கடைசியில் அவனைத் தூக்கிக் கொண்டார். அவன் சிறப்புக்களை இப்படி வகைப்படுத்தலாம்:

  1. Perfect Pitching
  2. Smooth sailing in high pitched notes
  3. Performing while singing
  4. Voice modulation
  5. Fearlessness

அவன் பாடி முடித்தவுடன் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு ஆடியன்ஸ் எழுந்து நின்று கொண்டும், ஆடிக்கொண்டும், பாராட்டு ஒலிகள் எழுப்பிக்கொண்டும் இருந்தனர். இப்படி வேறு யார்பாடும்போதும் நடக்கவில்லை.

ம.க.ப.வை விட பாவனாதான் அதிகமாகப் பேசுகிறார். நன்றாகவும். அவருக்கு வாய் பெரிசாக இருப்பது அதற்குக் காரணமல்ல! பெரிசாக என்றதுமே ஒரு அப்பள விளம்பரம் ஞாபகம் வருகிறது. இரண்டு வட்டமான பெரிய்ய்ய அப்பளங்களை கைகளில் பிடித்துக்கொண்டு ஏதோ நோபல் பரிசு கிடைத்துவிட்ட மாதிரி ஸ்னேகா ஆடுவார்! அதைப்பார்த்து எங்க ஊர் அஸ்மா தாசன், “ரொம்பவும் பெருசா, லெஹட்டு சைஸால்ல இக்கிது” என்றார்! இயற்கைக்கு மாறாக ஆடினால் இப்படித்தான் சொல்ல வேண்டி வரும்!

திரும்பத் திரும்ப மனோவை ஏன் ஒரு நீதிபதியாக நியமிக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவே இல்லை. சரியாகப் பாடத்தான் தெரியவில்லை என்றால், சரியாகப் பேசக்கூட அவருக்கு இன்னும் வரவில்லை. கருத்துக்கேட்டால், “சத்தியமா” என்று ஆரம்பிக்கிறார்! “உங்க ட்ராவல்” என்று அடிக்கடி சொல்வார்! சரியாகப் பாடாத குறைபாடுகளை மென்மையாகச் சுட்டிக்காட்டும் பக்குவமும் தைரியமும் அவருக்கு இல்லை. மனோ, மால்குடி சுபா போன்றவர்களை இனியாவது தவிர்க்கலாம்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book