3

சென்ற 13.03.14 பிற்பகல் 3 மணியளவில் சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைக்காக சலாஹுதீன் மெமோரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற என்னை அழைத்திருந்தார்கள். தமிழிலக்கியமும் நாகூர் எழுத்தாளர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன். கிட்டத்தட்ட 83 ஸ்லைடுகள். ஒன்றரை மணிநேரம் பேசினேன். என்றாலும் நாகூரின் பொக்கிஷங்களை அனைத்தையும் பற்றி என்னால்கூற முடியவில்லை. காலம் கருதி பல பேரைப் பற்றி சொல்லாமல் விட நேர்ந்தது. என்றாலும் ஒரு நிறைவு. நான் பேசிய பேச்சின் சாரம் இது படித்துவிட்டு சொல்லுங்கள்

1’நாகூர்  இல்லாமல் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு இல்லை’ – என புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.எம்.சாலி கூறுவதில் கொஞ்சம்கூட மிகையில்லை. ராட்சச இலக்கிய ஆளுமைகளைக் கொண்ட ஊர் நாகூர். அவர்களின் முக்கியமான சிலரைப்பற்றி மட்டுமே என்னால் இங்கே கூறமுடியும். சந்திரனைச் சுட்டும் விரல்போல. வழிகாட்டும் பலகை போல.

 மஹாவித்வான் குலாம்காதிர் நாவலர் (1833-1908)

தமிழக அரசு, குலாம் காதிறு நாவலரின் சந்ததியினருக்கு ரூ 6 லட்சம் அன்பளிப்பு வழங்கி அவருடைய படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது. இவர் ஒரு ராட்சச ஆளுமை, பன்முகப் படைப்பாளி – 50க்கும் மேற்பட்ட படைப்புகள் எழுதியவர் ஆனால் 24 மட்டுமே இப்போது முழுமையாகக் கிடைத்துள்ளது. அவற்றில் 14 கவிதைப் படைப்புகள். மற்றவை உரைநடை. வலது கையில் இலக்கணம் எனும் ‘வாளும்’ இடது கையில் செய்யுள் எனும் கொடியும் பிடித்து தமிழ்க் குதிரையில் வலம் வருபவர் என்றும்,  ”நான்காம் தமிழ்ச்சங்க நக்கீரர்” என்றும் சரியாகப் புகழப்பட்டவர்.

2 புலவர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், ஆன்மிகவாதி  மற்றும் மொழிபெயர்ப்புப்  பணியில் 19ம் நூற்றாண்டில் முத்திரை பதித்தவர். பன்மொழி வித்தகர்: தமிழ், அரபி, ஆங்கிலம், அரபுத்தமிழ் ஆகிய மொழிகள் அறிந்தவர். இவரது ஆசிரியர்கள் யார் மாணவர்கள் யார் என்று சொன்னால் இவரது புகழ் தெரியும். நாராயண சுவாமி பண்டிதர் — வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்கள். மறைமலை அடிகள் இவரது மாணவர்!

ஒன்பது வயதில் திருக்குர்ஆனையும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்தார். எழுத்துச்சுவடி, எண் சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு முதலான நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் 12 வயதில் கற்றுத் தேர்ந்தார்.

இலக்கிய இதழியல் முன்னோடியாகவும் இருந்துள்ளார். 1888ல் மலேயா பினாங்கில் வெளிவந்த ’வித்தியா விசாரிணி’ இதழை இவர் நடத்தினார்.பின்னர் நாகூரிலிருந்து அது வெளிவந்தது. நாவலர் ஆசிரியர். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்பு முதலிய விஷயங்களை அது பேசியது.

 நான்காம் தமிழ்ச்சங்கம்

1901 ஆம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து மதுரையில் நான்காவதுசங்கம்அமைத்தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய ‘மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை’ இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அன்று ‘நக்கீரர் என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார்.

முதலில் தனிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். பின்பு பதிகம், அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், புராணம், காவியம், ஆற்றுப்படை, வசன நூல்கள், உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

 படைப்புகள் — கவிதை

  1. ‘நாகூர்க் கலம்பகம்’ (1878)
  2. “நாகூர் புராணம்”(1893) நாகூர் ஆண்டகையின் வாழ்வு சிறப்பு கூறுவது. 30 படலங்கள் 1359 விருத்தங்கள். மலடு தீர்த்த படலத்தில்: சித்திரக்கவிகள்.
  3. “தர்கா மாலை” (1928) நாகூர் தர்கா சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது – 3ம் பதிப்பு – வெளியிட்டவர் ஆரிப் நாவலர்
  4.  “முகாஷபா மாலை’ (1899 , 1983) நாகூர் நாயகம் கனவில் நிகழ்ந்த  விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம் — 13 படலங்கள், 300 பாடல்கள்
  5.  ‘குவாலீர்க் கலம்பகம்’ (1882 ) கெளது குவாலியரி மீதான 101 பாடல்கள்
  6. ‘திருமக்காத் திரிபந்தாதி’ (1895) – மக்காவின் சிறப்பு கூறும் 100 பாடல்கள்
  7. ‘ஆரிபு நாயகம் (1896) — செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை வரலாறு — 02 காண்டங்கள் 43 படலங்கள். 2373 விருத்தங்கள்
  8. ‘பதாயிகுக் கலம்பகம்’ (1900) – ஆரிபு நாயகம் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது.
  9.  ‘பகுதாதுக் கலம்பகம்’ (1894) — பகுதாதின் சிறப்பு கூறும் 101 பாடல்கள்.
  10. புலவராற்றுப்படை (1903, 1968)–1901-ல் மதுரையில் நிறுவப்பட்ட 4ம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல் — பதிப்பித்தவர், டாக்டர் ம.மு. உவைஸ் (இலங்கை – MKUல் தமிழ்த்துறை  உமறுப்புலவர் இருக்கை)
  11. சமுத்திரமாலை
  12. பிரபந்தத் திரட்டு
  13. மும்மணிக்கோவை
  14. சித்திரக்கவித்திரட்டு

 படைப்புகள் – உரைநடை

  1. கன் ஜுல் கராமாத் – நாகூர் ஆண்டகையின் அற்புத வாழ்க்கை வரலாறு – 131 அத்தியாயம் – 576 Kanjul Karamatபக்கங்கள்
  2. முஹ்யித்தீன் பாகர் சாகிபின் தரீக்குல் ஜன்னாவுக்கு உரை
  3. காதிர் முஹ்யித்தீனுன் ஃபிக்ஹு மாலைக்கு உரை
  4. அரபுத் தமிழ் அகராதி
  5. சீறாப்புராண வசன காவியம்
  6. ஆரிபு நாயக வசனம்
  7. திருமணிமாலை வசனம்
  8. நன்னூல் விளக்கம்
  9. பொருத்த விளக்கம்
  10. நபிகள் பிரான் நிர்யாண மான்மிய உரை
  11. உமரு பாஷா யுத்த சரித்திரம் (4 பாகம்) – கல்தச்சன் பதிப்பகம் (ஆங்கிலத்தில் ரெய்னால்ட்ஸ் எழுதியது) 19ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கி ரஷ்யப் பேரரசுகளுக்கிடையே பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி  பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒமர்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

வியன் குயில் விளக்கம்

6யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் : ‘விடிவெள்ளி மதினா புக்கார் வியன்குயில் கூவிற்றன்றே’ என்று அவர் கூறியபோது ஒரு பெண் வியன் குயில் என்று கூறுவதன் காரணம் கேட்டார். குயிலுக்கு முட்டையிடத்தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. காக்கைக் கூட்டில்  தன் குஞ்சுகளை விட்டுவிடும். காக்கைக்கு அது தன் குஞ்சு அல்ல என்று தெரியவரும்போது அது கொத்த வரும். அப்போது குயில் குஞ்சுகள் எதிர்க்கும் துணிச்சல் கொண்ட வீறுள்ள பறவை அது. எனவேதான் வியன் குயில் என்று கூறினேன் என்று விளக்கினார். நீங்கள் ஒரு தானாப்புலவர்தானே என்று ஒருவர் கூற, ’த’ என்றால் தமிழில் ஆயிரம் என்று பொருள். எனவே ஆயிரம் புலவர்களுக்குத் தலைமைப் புலவன் நான் என்று பதில் சொன்னார்.

ரயில் பாடல்:

புலவராற்றுப்படை’யில்:‘மதுரைக்கு நடந்து சென்றால் நாள் பல செல்லும். ஆதலின் புகைவண்டியில் செல்லின் விரைவில் செல்லலாம்’ என்று கூறிப் புகைவண்டியை ”மரவட்டைச் செலவொப்பச்செல்பாண்டில் எந்திரவூர்தி” என்று வர்ணிக்கிறார்.

pulavarabedeenபுலவர் ஆபிதீன் (1916-66)

கவிஞர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், ஓவியர், பத்திரிக்கையாளர், பன்மொழி அறிந்தவர், சொற்பொழிவாளர், வணிகர், இலங்கை, பர்மா, மலேயாசிங்கப்பூர் போன்ற பல நாடுகளுக்கும் சென்று எழுதியவர். ஆனாலும் வறுமையில் வாடியவர்.

’ஆசானும் அகராதியும் அருகே வைத்து அறியத்தக்க வகையில் கவிதை இயற்ற விரும்பாதவன் நான் . மக்கள் விருப்பையே இலக்கணமாக மதித்து கவிதைகள் எழுதுகிறேன்’ என்றார்.

நூல்கள் :

  1. 1934 – நவநீதகீதம் — 10 பாடல்கள். நபிகள் பெருமானார், நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை ஆகியோர் மீது
  2. திருநபி வாழ்த்துப்பா (1935) –ரங்கூன் வெளியீடு
  3. 1949 – தேன்கூடு –கொழும்பு வெளியீடு
  4. 1961 – முஸ்லீம் லீக் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள்
  5. 1961 — ‘அழகின் முன் அறிவு’ கவிதை நூல் – யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்,சென்னை.

பொது அறிவுப் பாடல்கள் அதிகம், இஸ்லாமியப் பாடல்கள் குறைவு

இசைப்பாடல்கள் எழுதிக் குவித்தார். கேட்டவுடன் எழுதித் தருவார். ஒரு கோப்பைத் தேநீருக்காகவும். பாடல்களுக்காக ரூ 80 முதல் 500வரை பெற்றிருக்கிறார். முஸ்லீம் லீக், நீதிக்கட்சி, திமுக — வுக்கு கொள்கை விளக்கப் பாடல்கள் எழுதியுள்ளார்.

அவர் பாடல்களைப் பாடிய பாடகர்கள் சிலர்: நாகூர்தர்கா சங்கீத வித்வான் SMA காதர், நாகூர் ஹனிபா, இசைமணி யூசுப், ஹெச்.எம். ஹனிபா, காரைதாவுது, திருச்சி கலிபுல்லா, மதுரை ஹூசைன் தீன்,  இலங்கை மொய்தீன் பேக்.

மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே / மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே

என்ற நாகூர் ஹனிபா பாடிய புகழ்பெற்ற பாடல் அவர் எழுதியது.

pulavar-abedeen-portrait2ஓவியராகவும் இதழாசிரியராகவும் அவர் இருந்துள்ளார். மலேயாவில் ஓவியக்கூடம் ஒன்றை நடத்தினார் . சிங்கையின் ’மலாயா நண்பன்’ இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். (1947). நுட்பமான, சாடல் மிகுந்த அரசியல் விமர்சகராக இருந்துள்ளார். மாமியார் மருமகள் உறவைப்போல காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறது என்று சொன்ன அவர் அதற்கு ஒரு உதாரணம் சொன்னார். ஒரு பிச்சைக்காரிக்கு மருமகள் காசு இல்லை என்று கூறினாளாம். ஆனால் அவளை மறுபடியும் அழைத்த மாமியார், “உனக்கு காசு இல்லை சொல்வதற்கு அவள் யார், இப்போது நான் சொல்கிறேன், காசு இல்லை போ” என்று சொன்னாளாம். அதைப்போலத்தான் காங்கிரஸ் நடந்துகொள்கிறது என்று கூறினார்! 23.09.1966-ல் அவர் நாகூரில் காலமானார்.

நாகூர் தமிழ் பற்றி அவரது அருமையான பாடல்

  • ‘பாத்திரத்தை ஏனம் என்போம் / பழையதுவை நீர்ச்சோறு என்போம்
  • ஆத்திரமாய் மொழி குழம்பை / அழகாக ஆணம் என்போம்
  • சொத்தையுரை பிறர் சொல்லும் / சாதத்தை சோறு என்போம்
  • எத்தனையோ தமிழ் முஸ்லிம்  / எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

இன்னொரு பாடல்

  • அரசனை ஆண்டியாய் ஆக்கவா? / நல்ல அறிவுக்குத் திரையிட்டு மூடவா?
  • நரகத்துக் கதவினைப் பூட்டவா? / சக்தி நிறையவே எனக்குண்டு நம்புவாய்.
  • கடவுளால் ஆகாத காரியம் / கூடக் கனிவுடன் செய்திங்குக் காட்டுவேன்!
  • மடையனை நான்மட்டும் நாடினால் / தேச மனிதரில் மேதையாய் மாற்றுவேன்!

டாக்டர் மு.வ. 960l-ல் புலவர் ஆபிதீனின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதி :

‘சிறந்த கற்பனை என்பது, விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில். இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர்  ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுந்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கின்றோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும் நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைத்து வாடும் ஏழைப்பெண் பற்றிய பாட்டு, நாட்டில் உள்ள வறுமையை எடுத்துக் காட்டுவது.’

Hazrat-1ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி (1933-2002)

ஒரு ஞானியாகவும், ஆன்மிக குருவாகவும், அரபி, பாரசீகம், தமிழ், உர்து, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பன்மொழிப்  புலவராகவும் விளங்கிய பாகவி அவர்கள் 50க்கும் மேற்பட்ட நூல்களைக் கொடுத்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர். விந்தியன் என்ற புனைபெயரிலும் ஆரம்ப காலத்தில் எழுதியுள்ளார். பின்னர் தன் சொந்தப் பெயரிலேயே எழுதினார். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார் . மணிவிளக்கு, மணிச்சுடர் முதலிய பத்திரிக்கைகளில் அவரது படைப்புகள் வெளிவந்தன.

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியான இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன் என்ற மிகச்சிறந்த அரபி படைப்பை  கிட்டத்தட்ட 50 நூல்களாக அத்தியாயம் வாரியாக மொழிபெயர்த்துக் கொடுத்தவர். அவைகளை மொழிபெயர்ப்பு என்று சொல்வதைவிட மறுபடைப்பு என்று சொல்வதே மிகப்பொருத்தமானதாகும். அவருடைய முக்கிய பரிமாணம் அவர் ஒரு மகான் என்பதும், பல அற்புதங்களை நிகழ்த்தியவர் என்பதும்தான். ஒரு எழுத்தாளராக, படைப்பாளியாக இருப்பது அவரைப் பொறுத்தவரை உபரியான விஷயம்தான்.

5முக்கிய நூல்கள்

  1. ஞானக்கோட்டையின் தலைவாசல், 2. உள்ளத்தின் விந்தைகள், 3. உளத்தூய்மை, 4. இம்மையும் மறுமையும், 5. மகனுக்கு, 6. நாயகத்தின் நற்பண்புகள், 7. சமுதாய வாழ்வு, 8. சமுதாய நன்மைகள், 9. பதவி மோகம், 10. பாவமன்னிப்பு, 11. பணத்தின் பயன், 12. புறம்பேசாதே, 13. பொறாமை கொள்ளாதே, 14. திருமணம், 15. தனிமையின் நன்மைகள், 16. தனித்திரு — போன்றவையாகும்

 

 

நீதிபதி மு மு இஸ்மாயீல் (1921-2005)M M Ismail4

நாடறிந்த தமிழறிஞர், எழுத்தாளர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிறுதுகால தமிழக ஆளுநர், கம்பன் அறிஞர், கம்பன் கழகத்தலைவர்.

3நூல்கள் : (20-க்கு மேல்)

  1. மெளலானா ஆஜாத் (1945) (வாழ்க்கை வரலாறு)
  2. அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்
  3. இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு)
  4. மும்மடங்கு பொலிந்தன. (1978) வானதி பதிப்பகம், சென்னை. பக். 259
  5. கம்பன் கண்ட சமரசம் (1985) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
  6. உந்தும் உவகை (1987) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227
  7. இலக்கிய மலர்கள் (சென்னை வானதி பதிப்பகம் 1990)
  8. ஒரு மறக்க முடியாத அனுபவம் (1992) – வானதி கல்கியில் 1985ல் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு) 
  9. கம்பன் கண்ட ராமன்
  10. செவிநுகர் கனிகள்
  11. வள்ளலின் வள்ளல்
  12. பழைய மன்றாடி – வானதி பதிப்பகம் 1980
  13. மூன்று வினாக்கள் வானதி பதிப்பகம். 410
  14. நினைவுச்சுடர், 
  15. தாயினும்
  16. உலகப் போக்கு
  17. நயத்தக்க நாகரிகம்

1976-ல் கம்பராமாயணம் முழுகாப்பியத்தையும் மெல்லிய உறுதியான தாள் பதிப்பாக வெளியிட்டார். ”தலை சிறந்த 100 தமிழர்கள்” என்ற தினமணியின் ஆராய்ச்சிக்கட்டுரையில் அவர் ஒருவராக இருந்தார். 1979 –ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார். அவர் மிகவும் ரோஷக்காரர். எனவே தன்னைக்கலக்காமல் கேரளாவுக்கு மாற்றியதால் 1981ல் பதவியை ராஜினாமா  செய்தார். “எதிலும் நேர்மையையும் சத்தியத்தையும் பின்பற்றினால் கடவுள் அருள் தானாக வரும்” – என்று அவர் கூறினார்.

 பெற்ற பட்டங்கள் :

  • “இயல் செல்வம்”
  • “சேவா ரத்தினம்”
  • “இராம ரத்தினம்”
  • “கலைமாமணி”  (1991 – 1992)

வண்ணக்களஞ்சியப் புலவர் –18ம் நூற்றாண்டு

 இயற்பெயர்: சையது ஹமீது இப்ராஹீம். சந்தப் பாக்களும் ”எருக்கிலை பழுப்பதேன்

எருமைக்கன்று சாவதேன் / பாலற்று” என்பதைப் போன்ற கேள்வி பதில் பாணியில் இருக்கும் வண்ணப் பாக்களும் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இராஜ நாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம் ஆகிய மூன்று காப்பியங்களை இயற்றிய பெருமைக்குரியவர்.

படைப்புகள்

1.இராஜ நாயகம் – காப்பியம் சாலமன் என்று கூறப்படும் சுலைமான் நபி பற்றியது. 2240 பாடல்கள். கடவுள் வாழ்த்துப்பாடல்:

ஆரணத் தினி லகிலாண்ட கோடியி / லேரணக் கடல்வரை யினின் மற்றெங்குமாய்

பூரணப் பொருளெனப் பொருந்துமோர் முதற் / காரணக் கடவுளைகருத்திருத்துவாம்

 2.குத்பு நாயகம்— காப்பியம்  12-ம் நூற்றாண்டு இறைநேசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி பற்றியது. 39 படலங்கள் – 1707 பாடல்கள். அதில் ஒரு பாடல்:

முஹ்யித்தீன் என்று கூற முன்னவன் கருணையுண்டாம்

முஹ்யித்தீன் என்று கூற முஸிபத்தும் பலாயும் நீங்கும்

முஹ்யித்தீன் என்று கூற முத்தொகை உலகும் வாழ்த்தும்

முஹ்யித்தீன் என்று கூற முடிவிலாப் பதவியுண்டே

3. தீன் விளக்கம் – காப்பியம்

தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்ப மதீனாவிலிருந்து வந்த ஏர்வாடி நாதர் இறைநேசர் செய்யிது இப்ராகீமைப் பற்றியது. இவர் பாண்டி நாடு வந்து, அதை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியனை போரில் வென்ற  வரலாற்றுக் கதையையும் இது கூறுகிறது. இது ஏர்வாடியின் தல புராண வரலாறும் ஆகும். இவரது இன்னொரு நூல் 4. அலிபாதுஷா நாடகம்

Achimaசித்தி ஜுனைதா பேகம்(1917-1998)

தமிழில் புதினம் படைத்த முதல் முஸ்லிம் புரட்சிப் பெண் படைப்பாளி இவர். ஒரு நாவலாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும் இருந்துள்ளார். ”படிக்காத மேதை” என்று இவரை பேரா.மு.ஆயிஷாம்மா, 2007 அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய 7ம் மாநாட்டுக்கட்டுரையில் மிகச்சரியாக வர்ணிக்கிறார். ஏனெனில் இவர் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால் இவரது தூயதமிழ் நடை முதுகலை பட்டம் பெற்றவருக்குக்கூட வராது என்று துணிந்து கூறுவேன்.

 

படைப்புகள்

  1. காதலா கடமையா (1938, ஜூலை 2003 ஸ்நேகா, சென்னை)
  2. சண்பகவல்லிதேவி அல்லது தென்னாடுபோந்த அப்பாஸிய குலத்தோன்றல் (1947)
  3. மகிழம்பூ (1985)
  4. இஸ்லாமும் பெண்களும் – கட்டுரைகள் (1995)
  5. மலைநாட்டு மன்னன் –நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வெளிவந்த தொடர்கதை.
  6. ஹலிமா அல்லது கற்பின் மாண்பு
  7. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை
  8. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு
  9. காஜா ஹஸன் பசரீ: முஸ்லிம் பெருமக்கள் வரலாறு

இவரது காதலா கடமையா நாவலுக்கு டாக்டர் உவேசாவும் புதுமைப்பித்தனும் முன்னுரை வழங்கியுள்ளனர்.

முன்னுரை உவேசா:

சமீபகாலத்தில் நாகூர் சிஜுபேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா கடமையா என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதையும் செய்யத் துணிவர் என்பதும், இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். ..இந்நூலை எழுதியவருக்குத் தமிழிலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது.

முன்னுரை புதுமைப்பித்தன்: முஸ்லிம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்

காதலா கடமையாவும் நாடோடி மன்னனும்

எம்ஜிஆரின் ’நாடோடி மன்னன்’ படம் இக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பது சுவையான வரலாறு. அப்படத்திற்கு வசனம் எழுதிய ரவீந்தரிடம் எம்ஜியார் பாதிக்கதை சொன்னார். மீதிக்கதையை ரவீந்தர் சொன்னார்! எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டதற்கு, இது காதலா கடமையா நாவலின் கதை என்று அவர் பதில் சொன்னார்!  ரவீந்தர் நாகூர்க்காரர். மஹாதேவி போன்ற திரைப்படங்களுக்கு வசனமெழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ – என்ற வசனம் இவரின் பெண்ணியச் சிந்தனையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

‘காதலா கடமையா?’ நாவலின் கதைச் சுருக்கம்:

ஒரு இளவரசனின் முடிசூட்டு விழாவுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து அவனைப்போல உள்ள வேறொருவனுக்கு தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை அவன் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

ஜெர்மனி கண்ணன் நாகூர் வந்து  சித்தி வீட்டுக்குச் சென்று அவரது  தமிழ் மரபு அறக்கட்டளையின் முதுசொம் சாளரத்திலும் www.infitt.org லும் படைப்புகளை டிஜிடைஸ் செய்து பதிவு செய்தனர்.

அறிவுரை: ’இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.

ஒருமுறை அவரை சந்திக்க நான் என் நண்பரை அழைத்துச் சென்றேன். தான் விரைவில் இறந்துவிடுவதுதான் இயற்கை என்ற கருத்துப்பட அவர் அப்போது, “பழுத்த பழம்தானே மரத்தில் இருந்து முதலில் விழும்” என்றார்!

Nagore Saleemகவிஞர் கலைமாமணி நாகூர் சலீம்  (1936-2013)

பரம்பரை: இலக்கியமும் ஆன்மிகமும் கலந்தது. பாட்டனார்கள்: வண்ணக்களஞ்சியப் புலவர், ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி. ஏ கே வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோல. அந்த வரிகள்:

வெண் முத்து மாலைகள் / வெள்ளி நுரையினில் / சூடி வருகின்றாள்

இங்கே வேண்டிய பேருக்கு / வாரிக் கொடுத்திட / ஓடி வருகின்றாள்

இன்னொருத்தி:

கண்ணியர் கண்ணென  / மாவடுப் பிஞ்சுகள் / நீரில் மிதக்குதடி

அது கண்ணல்ல பிஞ்சல்ல  / கெண்டைகள் அம்மாடி கும்மியடிங்கடி

இயற்பெயர்: த’லீஃப் சலீம் பெய்க்

எழுதிய பாடல்கள்: 7500க்கும் மேல்

எல்.பி.இசைத்தட்டுக்கள்: 400க்கும் மேல்

ஒலிநாடாக்கள்: 100க்கும் மேல்

பள்ளிப்படிப்புகூடக் கிடையாது

200க்கும் மேற்பட்ட பாடகர் பாடகியர் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். குறிப்பிடத்தகுந்தவர்கள்:

நாகூர்எம்ஹனிபா, காயல்ஷேக்முஹம்மது(தமிழகத்து), சரளா

புனைபெயர்கள்: வண்ணதாசன், மறைதாசன், பயணப்பிரியா, லீசம்

”வண்ணக்களஞ்சியப் புலவரின் ஞாபகமாகத்தான் நான் ஆரம்பத்தில் வண்ணதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன்”.

சலீமின் பாடல்களுக்கு இசையமைத்த சில இசையமைப்பாளர்கள்: கண்மணி ராஜா,டிகே ராமமூர்த்தி, தேவா, எம் எஸ் விஸ்வநாதன்

எம்ஜியார் பற்றி முதன் முதலில் பாட்டு எழுதியவர் நாகூர் சலீம்தான். அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்:”காய்ந்து சிவந்தது சூரிய காந்தி.. எங்கள் வீட்டுப்  பிள்ளை.. பாடல் 1: பட்டு மணல் தொட்டிலிலே.. / பூ மணக்கும் தென்றலிலே / கொட்டும் பனி குளிரினிலே / கடல் வெளிக் கரையினிலே

பாடல் 2: சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே / சிரித்தது போதுமென்று நிறுத்திக் கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ

இன்னொரு உதாரணம்

  • காதலுக்குத்தீங்கு செஞ்சா தேசிய குற்றம்
  • இப்படி ஆள்பவர்கள் போடவேணும் அவசரச் சட்டம்
  • காதல் ஒரு பாவமல்ல தோழா / நா கணக்குப் போட்டுப் பாத்தேன் ரொம்ப நாளா
  • காதலிச்சா சாதிபேத சச்சரவு ஏது / சமத்துவமே ஆதரிச்சு சங்கம் வைக்கும் பாரு
  • வரதட்சணை தற்கொலைகள்,வசதித் திமிர் ஓயுமே
  • வாழ்வுக்காக  ஏங்கும் பெண்கள் விழியின் ஈரம் காயுமே
  • கண்ணு நாலு சந்திச்சு கலந்துகிட்டா தப்பா
  • கற்பு ஜோதி அணைஞ்சிடாம கட்டிக்கடா அப்பா
  • நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம் / நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்
  • ”அடக்கமாகப் போறவன் அடக்கமா பேசினா தப்பில்ல” என்று தன் இறுதி தொலைக்காட்சி நேர்காணலின்போது கூறினார்.

Salim Mama Receiving Kalaimamani Awardஎழுதிய நாடகங்கள் சில — கதை, வசனம், பாடல்கள், இயக்கம் :

1. விதவைக் கண்ணீர் , 2. சந்தர்ப்பம், 3. சோக்காளி, 4. மிஸ்டர் 1960

திரைப்படப் பாடல்கள்

மஹா நடிகன் (கோடம்பாக்கம் ஒன்னு)

அவளும் தாயாளாள்

நாகூரார்மகிமை (ஆறுகளெல்லாம்)

முகலேஆஸம்தமிழ்டப்பிங்3 / 4 பாடல்கள்

தமிழக அரசின் கலைமாமணி  விருது 2000

thooyavanதூயவன்(1947-1987)

இயற்பெயர்: அக்பர்

சிறுகதைகள், மாத நாவல்கள், நாடகம்

84 திரைப்படங்களுக்கு வசனம்

07 திரைப்படத் தயாரிப்பு

10வது மட்டுமே படிப்பு

மனைவி ஜெய்புன்னிஸாவும் எழுத்தாளர்

குமுதம், ஆனந்த விகடன், மாலை முரசு, தினந்தந்தி, ராணி, நயனதாரா போன்ற வார மற்றும் மாத இதழ்களிலும் கதை எழுதினார்

சிறுகதை உலகில் ஸ்டார் அந்தஸ்து பெற வைத்ததது ஆனந்த விகடன்- முத்திரைக் கதைகள் — பிரபலமான சிறுகதைகள்: உயர்ந்த பீடம், மடி நனைந்தது, பூஜைக்கு வந்த மலர், வெறும் சிலை, நிறங்கள், குங்குமச்சிமிழ்

வசனமெழுதிய திரைப்படங்கள் சில:

ரங்கா, பொல்லாதவன், அன்புக்கு நான் அடிமை (ரஜினி), அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு(ஜெய்), ஆட்டுக்கார அலமேலு, பொல்லாதவன், மனிதரில் மாணிக்கம், புதிய பாதை, திக்குத்தெரியாத காட்டில், ஜப்பானில் கல்யாண ராமன்

தயாரித்த சில படங்கள்

அன்புள்ள ரஜினிகாந்த்

வைதேகி காத்திருந்தாள்

விடியும்வரை காத்திரு

கேள்வியும் நானே பதிலும் நானே

உள்ளம் கவர் கள்வன்

பாக்கியராஜ், ஈரோடு முருகேசன், ஜான் போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர்

1978-ம் ஆண்டு பலப்பரீட்சை என்ற திரைப்படத்துக்காக (முத்துராமன், சுஜாதா நடித்தது) சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதை — ஆறு பவுனுக்கு மேல் இருந்த உண்மையான தங்கப்பதக்கம் — அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜியார் கையால் தூயவன் பெற்றுக்கொண்டார்.

Z Nanaஇஜட். ஜபருல்லாஹ் (மார்ச் 15, 1949)

கவிஞர், மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டும் எழுதுவார். பேச்சாளர், முஸ்லிம்லீக் இளைஞரணித் தலைவர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், மாறுபட்ட சிந்தனையாளர்: ”இந்த நூல் உங்கள் வாழ்க்கையையே திசைமாற்றப்போகிறது”.

நான்மறையைக் கற்றவனா ஞானி

இல்லை

’நான்’

மறையக்கற்றவனே

ஞானி

புரிந்ததும் புரியாததும்

=================

தியானம் செய்

என்றார் குரு

நான்தான்

கவிதை எழுதுகிறேனே என்றேன்

கோபித்தார்

எனக்கு

தியானம்  புரிந்த அளவுக்கு

அவருக்கு

கவிதை புரியவில்லை

தனம்

=====

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

என்று முன்னோர்கள்

சரியாகத்தான்

சொல்லியிருக்கிறார்கள்

முட்டாள்கள்தானே

பெரும்பாலும்

தனத்தோடு வாழ்கிறார்கள்?!

வேறொன்றும் அறிகிலேன்

=====================

மின்னல் இடிமழையாய் / மீறிவரும் மன அதிர்வில்

கண்ணீரின் கரிப்பில் / கால்சுமக்கும் கடமைகளில்

முன்னும் பின்னுமழுத்தும் / முதுகொடியும் பிரச்சனையில்

என்னைப் புடம்போட்டு / இறுதியிலே களிப்பூட்டும்

உன்னைப்புகழ்வதன்றி / வேறொன்றும் அறிகிலனே!

கண்ணே! ரஹ்மானே! / கருணையின் பேறூற்றே!

இன்னும் கவிதை நூல் ஒன்றும் வரவில்லை, நான் தொகுத்துக்கொண்டுள்ளேன்.

Nagore Sadikகவிஞர் நாகூர் சாதிக் (1937)

  • கவிஞர், பாடலாசிரியர்
  • ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத்தெரியுமா
  • அல்லாஹ்வை நாம் தொழுதால்
  • தக்பீர் முழக்கம்
  • சொன்னால்முடிந்திடுமோ
  • இருலோகம் போற்றும் இறைத்தூதராம்
  • நாடகவசனம்: கொள்ளைக்காரன், நல்லதீர்ப்பு

 

 

charuசாருநிவேதிதா – சர்ச்சைக்குரிய எழுத்தாளர்

சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுகிறார்.

படைப்புகள்: ஜீரோ டிக்ரி, எக்சல், எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சிபனியனும் போன்றவை. ’ஆட்டோ ஃபிக்‌ஷன்’ என்ற வகையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லப்படுபவர். ’ஆண்ட்டி கல்ச்சர்’ எனப்படும் பண்பாட்டுக்கு எதிரான குரல் இவரது. அடிக்கடி முரண்படுகின்ற, பிரச்சனைகளில்  மாட்டிக்கொள்கிற எழுத்து இவரது. பாலியல் வக்கிரங்களுக்கு இவர் எழுத்து வக்காலத்து வாங்குகிறது.

 

 

 

abedeenஆபிதீன் (1959)

நுட்பமான நகைச்சுவையோடு எழுதக்கூடிய எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுகிறார். துயரம் சொல்லும் அலாதியான நகைச்சுவை இவரது. யாத்ரா, கணையாழி போன்ற பத்திரிக்கைகளில் இவர் எழுதியுள்ளார். இப்போது இணையத்தில் எழுதி வருகிறார். இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன:

  • இடம் – சிறுகதைகள் ஸ்நேகா வெளியீடு.
  • உயிர்த்தளம் – கதைகள் எனி இண்டியன் வெளியீடு.

அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம்:

சில சர்க்கார்கள் இரண்டு தாடிகூட வைத்திருக்கிறார்கள் — — விஷம் கதை

ஷைத்தான் டி.வியில் நான் விரும்பும் ஒரே நிகழ்ச்சி ‘காலேயே வா! ‘ தான். காலைக்கடன் முடிக்காமலேயே வரும் அறிஞர்களை பேட்டி காண்பார்கள் அதில். பேட்டி கண்ட பிறகு அவர்களாலேயே மறுபடியும் பேட்டி காண இயலாது! பே.மு , பே.பி என்ற ஒன்று இருக்கிறது – ஹே ஷைத்தான் கதை

Being introducedநாகூர் ரூமி (1958)

1980-களிலிருந்து எழுதி வருகிறேன். கணையாழி, யாத்ரா, மீட்சி, படித்துறை, புது எழுத்து போன்ற சிற்றிதழ்களிலும், மணிவிளக்கு, மணிச்சுடர், சுப மங்களா, குமுதம், குமுதம் ஜங்ஷன், ஆனந்த விகடன், கல்கி, அமுத சுரபி போன்ற வார, மாத இதழ்களிலும் எழுதியுள்ளேன். இதுவரை 40 நூல்கள் வெளிவந்துள்ளன.

 

 

h    03 கவிதைத் தொகுதிகள்

h    02 சிறுகதைத்தொகுதிகள்

h    03 நாவல்கள்

h    03 வாழ்க்கை வரலாறு

h    02 கட்டுரைத் தொகுதிகள்

h    06 சுயமுன்னேற்ற நூல்கள்

h    08 மொழிபெயர்ப்பு நூல்கள்

h    03 சமயம், ஆன்மிகம்

h    02 ஹெச் ஐ வி

h    05 ஆங்கில நூல்கள்

h    02 ஒலிப்புத்தகங்கள்

h    01 மின் நூல்

விருதுகள்

h    2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் – திருப்பூர் தமிழ்ச்சங்க விருது

h    2009 – நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது ஹோமரின் இலியட்

h    2009 – இஸ்லாமிய தமிழிலக்கிய இரண்டாம் மாநாடு – இலக்கியச் சுடர் விருது

h    2011 – டிஷ்டிங்க்விஷ்டு அலும்னஸ் விருது – ஜமால் முகமது கல்லூரி

தமிழிலக்கியத்திற்கு நாகூர் படைப்பாளிகளின் பங்கு கணிசமானது மட்டுமல்ல, கனமானதும்கூட. அப்துல் கய்யூம், இதயதாசன், காதர் ஒலி, ஹத்தீப் சாஹிப், கமலப்பித்தன் போன்ற முக்கிய பல படைப்பாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். நேரமின்மை காரணமாக அவர்களைப் பற்றி இதில் கூறமுடியவில்லை.  எனவேதான் இந்த பேச்சு முழுமையானதல்ல என்று கூறினேன். இது ஒரு குறிப்பான் மட்டுமே. நன்றி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book