4

Salim Mama (2)சென்ற ஜுன் மாதம் ஒன்றாம் தேதி, கலைஞருடைய 90-வது பிறந்த நாளுக்காக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அதுபற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். அன்றுதான் சலீம் மாமா இந்த உலகை விட்டுப் பிரிந்திருந்தது. நான் நாகூர் போய்ச்சேரமுடியாத சூழ்நிலை எனக்கு அப்போது. (அதற்கு காரணம் கலைஞரல்ல, என் இதயம்தான்). அப்போது என்னை சந்தித்த கவிஞர் ஜலாலுதீன் சலீம் மாமா பற்றி ஒரு இரங்கல் கூட்டம் வைக்கலாம் என்று கூறினார். நான் நிச்சயம் வருகிறேன் என்று கூறினேன். கவிக்கோகூட சலீம் உங்க மாமாவா என்று கேட்டார்.

பின்பு பலமுறை ஜலாலுத்தீனோடு நான் இந்தக் கூட்டம் பற்றிப் பேசினேன். அவரும் பேசினார். நான் மாமா  பற்றிய தகவல்களை, நிழல்படங்களை, வீடியோக்களையெல்லாம் எடிட் செய்து வெட்டி, ஒட்டி, சேர்த்து ஒரு பவர் பாயிண்ட் தயார் செய்துவைத்திருந்தேன். கடைசியில் கூட்டம் ஓகேயான நாள் எனக்கு ஓகேயாகவில்லை! நான் சென்னையில் இந்தக் கூட்டம் கருதியே பல நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் வைக்காமல், திடீரென்று கே எம் கே சார் ‘டேட்’ கொடுத்துவிட்டார் என்று நான் ஊர் புறப்பட்ட நாளன்று ஜலால் அவர்கள் கூட்டத்தை வைத்துவிட்டார். நான் மறுநாள் கல்லூரியில் இருக்கவேண்டும். கூட்டமும் மக்ரிபுக்குப் பிறகு தொடங்கியதால், கே எம் கே, கவிக்கோ, மு மேத்தா, முன்னால் எம் எல் கே நிஜாமுத்தீன், பாடகர் இறையன்பன் குத்தூஸ், கனிசிஷ்தி அண்ணன் போன்ற விஐபிகள் கலந்துகொண்டதால், நான் இடையில் நுழையவோ அவசரப்படுத்தவோ முடியாது. எனவே என்னால் கடைசியில் பேசிவிட்டு ரயிலில் ஊருக்குப் போக முடியாத சூழ்நிலை இருந்தது.

எல் சி டி ப்ரொஜக்டர் தயார் செய்வது பற்றி சகோதரர் கவிஞர் ஜலால் அறிந்திருக்கவில்லை. நானே தயார் செய்து கொண்டுபோகலாம் என்றாலும், கூட்டம் நடந்த முஸ்லிம் லீக் அலுவலகத்தில் எப்படிப்பட்ட வசதிகள் / சுவர்கள் இருக்கும் என்றும் தெரியாது. எனக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்பட்டது. அது நிச்சயமாக முடியாது என்ற காரணத்தாலும் நான் போகவில்லை. என்றாலும் சலீம் மாகாவின் மகனார் பாரி பேக் அவர்களை போகச்சொல்லி நான் சொல்லியிருந்தேன். அவரும் சென்றார். நிகழ்ச்சியை வீடியோ எடுங்கள், அதற்குரிய செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் ஜலாலிடம் சொல்லியிருந்தேன். சென்ற 14.06.2013 அன்று நடந்த இரங்கல்கூட நிகழ்வுகள் முழுவதையும் அவரும் வீடியோ எடுத்து எனக்கனுப்பி வைத்தார். (என் வாக்கையும் நான் காப்பாற்றிவிட்டேன்)!

அந்த வீடியோக்களைப் பார்த்து எனக்குத் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளத்தான் இது. நாகூர் சலீம் நினைவலைகள் என்ற பொருத்தமான தலைப்புகூட கவிஞர் ஜலால் கொடுத்ததுதான்.

தலைமை கவிக்கோ அவர்கள்.

கிராஅத் ஏ ஹெச் எம் இஸ்மாயில்.

இறைவாழ்த்து: இறையன்பன் குத்தூஸ் (நாகூர் ஹனிபா மாமாவின் ’எக்கோ’க்களில் ஒன்று)

முன்னிலை: கவிஞர் ஷேகு ஜமாலுதீன், ஆயிரம் விளக்கு உசேன் (மாமாமீது அளப்பரிய பிரியம் கொண்ட இவர் அன்று உடல்நலக்குறைவால் வரமுடியவில்லை) மற்றும் எம். ஜெய்னுல் ஆபிதீன்.

வரவேற்புறை: கவிஞர் இ பதுருதீன்

தொகுப்புரை: கவிஞர் எம். ஜலாலுதீன்

பேச்சாளர்கள்: பேரா. கே எம் கே, கவிக்கோ, கவிஞர் மு மேத்தா, கனி சிஷ்தி, மு ஹ ஆ அபூபக்கர், பேரா. மு இ அஹ்மது மரைக்காயர்,  எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னால் எம் எல் ஏ, நாகூர்), நாகூர் ரூமி (வரவில்லை)

நன்றியுரை: பாரி பே

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேரவை

நிகழ்ச்சி நடந்த சின்ன ஹாலில் இருந்த பல நாற்காலிகள் காலியாக இருந்தன. கிராஅத் ஓதப்பட்ட பிறகு நான்கு பேர் நான்கு பாடல்களைப் பாடினார்கள். அவைகள் மாமாவின் பாடல்களைப் போல இல்லை. குரல்கள் ரசிக்கும்படியானவையாகவும் இல்லை. மாமா உயிரோடு இருந்திருந்தால், இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்திருந்தால், “என்னப்பா இது, இசைக்கு இரங்கல் கூட்டமா?” என்று வழக்கம்போல வெடிச்சிரிப்புச் சிரித்துக்கொண்டே என் காதுக்குள் கேட்டிருக்கும். எனக்கு அப்படித்தான் தோன்றியது. மூத்த மகளார் ஹசீனாவுக்குத் திருமணம் முடித்துக்கொடுத்து, மணமகளை மணமகன் வீட்டுக்கு அழுதுகொண்டே அனுப்பி வைத்துவிட்டு, ஹசீனா போனபிறகு, வீட்டுக்குள் வந்த மாமா, எங்களையெல்லாம் பார்த்து, “ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா, எப்படி என் நடிப்பு” என்று வெடிச்சிரிப்பு சிரித்தது! அது நடிப்பு என்று சொன்னதுதான் நடிப்பு என்று அங்கிருந்த எல்லாருக்கும் புரிந்தாலும்!

முதலாவதாக கனிசிஷ்தி அண்ணன்தான் பேச அழைக்கப்பட்டார். பேசுவதற்கு முன் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்பு தொப்பியை கழற்றிப் போட்டுக்கொண்டார். தோள் துண்டை சரிசெய்துகொண்டார். அஸ்ஸலாமு அலைக்கும் என்று தொடங்கி, அவருக்கு பாடல் பாடியவர்கள், வந்திருந்தவர்கள் எல்லாருடைய பெயரையும் சொல்லி, அவர்களே, அவர்களே என்று முடித்தார். தம்பி நாகூர் ரூமியும் வருகை புரிந்திருக்கிறார் என்றும் கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம். அண்ணனுக்கு என்னை நன்றாகத்தெரியும். அப்படியானால்  என் பெயரில் இன்னொருவர் இருக்கிறாரா? அல்லது எனக்கே தெரியாமல் நானே போய்விட்டேனோ?! அல்லது சாய்பாபா மாதிரி இங்கே ஒரு நாகூர் ரூமி, அங்கே ஒரு நாகூர் ரூமி! ஆஹா, நல்ல ஆன்மிக முன்னேற்றம்தான்! அண்ணன் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் அலைபேசிகளை செவிகளில் பொருத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்!

விருந்தோம்பலில் சலீம் மாமா ஒரு மன்னன். கடைசி விருந்து அவருக்கும் இன்னும் சிலருக்கும் கொடுக்கப்பட்டதுதான் என்று கூறினார். சலீம் மாமா டெல்லி ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், அது கவிக்கோவுக்கான தகவல் என்றும் கூறினார். மாமா காலமானது பற்றிய குறுஞ்செய்தி அவருக்கு இரவு ஒரு மணிக்கு வந்ததாகவும் கூறினார்.

அடுத்து பேரா. அஹ்மது மரைக்காயர் பேசினார். திருக்குறளைப்போல சுருக்கமாகப் பேசும்படி வேண்டுகோள் விடுத்தார் கவிஞர் ஜலாலுத்தீன். இஸ்லாமிய ஞானம் “இந்த அளவுக்காவது பரவியிருப்பதற்குக் காரணம்” வலிமார்கள் மட்டுமல்ல, நாகூர் ஹனிபா போன்ற பாடகர்களும் காரணம் என்று கூறினார். அவர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுத்த கவிஞர்களும் காரணம் என்பது உட்குறிப்பு. கர்நாடக, இந்துஸ்தானி இசையையும் அடிப்படையாக வைத்து இசைப்பாடல்களையும், சமுதாயப்பாடல்களையும், உளவியல் பாடல்களையும் சலீம் மாமா எழுதியதாகக் குறிப்பிட்டார். கப்பலுக்குப் போன மச்சான் பாடலை பாடியும் காட்டினார்! ”பல கவிஞர்கள் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நாகூர் சலீம் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்றும் கூறினார். சலீம் மாமாவின் 6000-த்தும் மேற்பட்ட பாடல்களை அவருடைய மாணாக்கர் ஒருவருக்கு முனைவர் பட்ட ஆய்வுக்காகக் கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

நாகூர் சலீமைத் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று பலர் கூறினார்கள். அவர் எழுதிய பாடல்களைச் சொல்லிக் கேட்டால், அவரா, அவரா என்று கேட்கின்றனர் என்று கவிஞர் ஜலாலுத்தீன் கூறினார்.

அடுத்து முன்னால் எம் எல் ஏ நிஜாம் பேசினார். (எனது பள்ளிக்கூட தோழர் மாலிமாருடைய தம்பி இவர்). இந்த நாடு ஒரு தாயைப்போன்ற மரம் என்று எழுதியதைக் குறிப்பிட்டார்.  எனக்கு பாட வராது என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பாடவும் முயற்சி செய்தார். அடிக்கடி பாரதியையும் மாமாவையும் ஒப்பிட்டுப் பேசினார். மாமா எழுதிய நாடகங்களையும், திமுகவுக்காக எழுதிய பாடல்களையும் குறிப்பிட்டார்.

துபாய்க்குப் பயணம் போய் வருஷம் ஆறாச்சு

துள்ளி வரும் காவிரிபோய் கண்ணு ரெண்டும் ஆறாச்சு

என்ற வரிகளைக் குறிப்பிட்டு, காவிரி வறண்டுபோனதுபோல் அப்பெண்ணில் கண்ணீரும் வறண்டு போகும் என்று குறிப்பிட்டாரோ என்று கூறினார்.

கண்மணி  ராஜா (முபாரக்) அடுத்து பேசினார். தனது தந்தைக்கும் மாமா பாடல்கள் எழுதிக்கொடுத்ததாகவும், அவருக்கும் எழுதியதாகவும் கூறினார். அவருக்காக மாமா எழுதிய இரு பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டபொழுதி எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டது:

ஆசையில் நாங்கள் மிதந்தாலும்

ஆவியின்  கயிறோ உன் கரத்தில்

ஓசைப்படாமல் உயிர்ப்படகு

ஒதுங்கும் ஒருநாள் உன் கரையில்

மூன் டிவி பேட்டியின்போது, “நீங்க ரொம்ப அடக்கமா பேசுறிங்க” என்று பேட்டியெடுத்தவர் மாமாவிடம் சொல்ல, அதற்கு மாமா உடனே, “அடக்கமாகப் போறவன், அடக்கமா பேசுனா தப்பில்ல” என்று சிரித்துக்கொண்டே சொன்னது ஞாபகம் வருகிறது.

Oh my God! I really thank Allah for making me come into this family of great poets! மூன் டிவிக்கு “இன்று இவருடன்” என்ற நிகழ்ச்சியில் வந்த முதல் பேட்டி அது. மாமாவின் கடைசிப் பேட்டியும் அதுதான்.

ஒரு மிகப்பெரிய கவிஞரை நாம் இழந்துவிட்டோ, நாம் மட்டுமல்ல, இந்த உலகமே இழந்துவிட்டது என்று மேலும் அவர் கூறினார். இசை மேதை மொசார்ட் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். ஒருவர் இறந்துபோனதற்கான இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுக்கமுடியுமா என்று அவரிடம் கேட்க, அவரும் இறப்பிற்கான இசைக்குறிப்புகளை (notations) எழுதிக்கொடுக்கிறார். பின்னர் அவர் இறந்துபோகிறார். இதைச் சொல்லிய கண்மணி ராஜா, இதைப்போல இறப்புக்கான பாடலொன்றை சலீம் மாமா ஏதோ வராத ஒரு திரைப்படத்துக்காக ஏதோ ஒரு இயக்குனர் கேட்க எழுதிக்கொடுத்தது என்று சொல்லிவிட்டு அந்த வரிகளையும், அதுதான் மாமா இறுதியாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிடுகிறார். அதன் பல்லவி:

விசுலு ஆட்டண்டா உசுரு ஊர்வலம்

ஓலைப்பிரிஞ்ச மனுசனுக்கு மாலை தோரணம்

ஆட்டம் போடுடா வேட்டையாடுடா

ஆடும் ஊஞ்சம் அறுந்துபுட்டா ஏது நிரந்தரம்

சொந்தங்கள அடையாளம் காட்டும் மூச்சுடா

பந்து உடல் வெடிச்சுபுட்டா  பந்தயமே போச்சுடா

வீதியெல்லாம் பூத்தெளிச்சு தூள் கெளப்புது

சாதி சனம் மாத்தி மாத்தி தோள் கொடுக்குது

பேசியவர்களிலேயே என் மனதைக் கவர்ந்த பேச்சுக்களில் ஒன்று இது. (அடுத்தது கவிக்கோவினுடையது). அடுத்து கவிஞர் ஷேகு ஜலாலுதீன் பேசினார். மாமாவை நாகூர் சலீம் சாபு என்றும், ஏழு திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார் என்றும் கூறினார். அடுத்து குத்தூஸ் ஒரு பாடல் பாடிய பிறகு, கே எம் நிஜாமுதீன் என்பவர் பேசினார்.

பின்பு மு மேத்தா அண்னன் பேசினார்:

“சலீமைப் பற்றி மறுபடியும் மறுபடியும் பேசவேண்டியுள்ளது என்ற உணர்வு மேலிடுகிறது. ஹிந்துவில் வந்த செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஒரு மகாகவிஞனுக்குரிய மரியாதையை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்திருக்கிறது. ஆனால் ஒரு தமிழ்ப்பத்திரிக்கைகூட அவருடைய மரணச் செய்தியைக்கூட வெளியிடவில்லை. நாகூர் சலீம் என் நண்பர் என்று என்னால் சொல்லமுடியவில்லை. என்னுடைய மூத்த சகோதரர் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. நாகூர் சலீம் அற்புதமான கவிஞரும் அற்புதமான மனிதரும்கூட. நாகூர் சலீம் ஒரு மாமனிதர் என்று எந்த சபையிலும் என்னால் சொல்லமுடியும். ஒருநாளைக்கு ஒரு கவிஞன் ஒரு பாட்டு எழுதினால் அது பெரியவிஷயம். உடுமலை நாராயணகவி 15 நாள் எடுத்துக்கொள்வாராம். அண்ணன் சலீம் அவர்கள் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 15 பாடல்களை அனாயாசமாக எழுதுகிற ஆற்றல் அவருக்கு இருந்திருக்கிறது. அவர் நம்முடைய சமுதாயத்திலே இருந்தார் என்பதால்தான் திரையுலகத்திலே அவர் முன்னுக்கு வரமுடியவில்லை. பாடல்களைப் பாடியவர்களுக்கு கிடைத்த புகழ் அவற்றை எழுதிய கவிஞர் சலீமுக்குப் போய்ச்சேரவில்லை..எம்ஜியார் சலீம் பற்றிய குறிப்புகளை வாங்கி தன் பேண்ட் பாக்கட்டில் வைத்துக்கொண்டார், என்னை அடிக்கடி வந்து சந்தியுங்கள் என்றும், ரொம்ப காலதாமதமாக வந்திருக்கிறீர்கள் என்றும் கூறினார்” என்று கூறினார்.

மறுபடியும் குத்தூஸ் ஒரு பாடலை அலறிய பிறகு பேரா. கே. எம். கே. சார் பேசினார்.

“அந்தக் குடும்பமே ஒரு சிந்தனைச் சுரங்கம். எதனையுமே மாற்றி சிந்திக்கக்கூடிய ஒரு மரபு அந்தக் குடும்பத்தில் இருந்துவந்திருக்கிறது. நாகூருக்கு பெருமையைச் சேர்த்தவர்கள்…நாகூர் சலீம் முஸ்லிம்லீக் தலைவர்களோடு மிகமிக நெருக்கமாக இருந்தவர், என் மீது அளப்பரிய பற்றுடையவர்; அடிக்கடி அவரோடு பேசுவதுண்டு, தொடர்பு கொள்வதுண்டு,அவருடைய மறைவு எங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய இழப்பு, சமுதாயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்டிருக்கிற ஈடுசெய்யமுடியாத இழப்பு, தமிழுக்குச் சேவை செய்த நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்துவிட்டது என்ற உணர்வு நமக்கு ஏற்பட்டிருக்கிறது…அவருடைய சேவையை தொடர்ந்து நாட்டுக்கு நினைவு படுத்துவோம்” என்றெல்லாம் பேசினார். பேசும்போது என்னுடைய பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

இறுதியாக கவிக்கோவின் சிறப்புரை.

“நாகூருக்கு பல சிறப்புக்கள் உண்டு. முதல் சிறப்பு அது ஒரு புனித பூமி. தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியராக ஆவதற்குக் காரணமாக இருந்த மகா ஞானி (பாதுஷா நாயகமவர்கள்.) அந்த நன்றிகூட இல்லை (இது இன்று பிரிந்துகிடக்கும் பல ஜமா’அத்துகளுக்காக). இறைவன் அந்த ஊருக்கு பெரிய அருள் செய்திருக்கிறான். அந்த மண்ணில் பிறந்தவன் ஒன்று ஞானியாவான் அல்லது கவிஞனாவான். வேறுமாதிரியாகவும் ஆவான்…(சிரிப்பு)..நாகூரின் மிகப்பெரிய ஆகிருதி குலாம் காதிர் நாவலரும், செய்குத்தம்பிப் பாவலரும்…குலார் காதிர் நாவலர் மதுரைக்குப் போய் சேதுபதி முன்னால் தன் புலமையைக் காட்டியபோது என்ன பரிசில் வேண்டும் என்று கேட்டார் மன்னர். அதற்கு குலாம்காதிர் நாவலர், “நீர் எமக்கேதும் பரிசில் தரவேண்டாம். தமிழன்னைக்குப் பரிசில் தாரும். நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்துத்தாரும்” என்று கேட்டாராம். இது எத்தனை பேருக்குக் தெரியும்?

“நமக்குத்தான் கவிதை என்றால் ஹராம், இசை என்றால் ஹராம்… குர்’ஆனே ஒரு கவிதைதான். இவன் கவிதை ஹராம்ங்கிறான் (இது யாருக்கு என்று உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும்)..இசை ஹராங்கிறான்… தாவூத் நபி இசை பாடுகிறவர். அவருக்கு அருளப்பட்ட வேதமே இசை வடிவம்தான். ஸபூர் என்றால் சங்கீதம் என்று அர்த்தம். தெரியாது, படிக்கிறதில்லை, அரைகுறைகள்…தாவூத் (அலை) அவர்கள் பாடினால் பறவைகளெல்லாம் அவரைச் சூழ்ந்து அமர்ந்து உட்கார்ந்துகொள்ளும், அவ்வளவு இனிமையான குரலை அவருக்கு அல்லாஹ் கொடுத்தான். பெருமானார் அகழ்ப்போரின்போது தோழர்களெல்லாம் பாடிக்கொண்டே வேலை செய்தார்கள், பெருமானாரும் பாடினார்கள். புகாரியில இருக்கு.

“படிக்கிறதில்லை, அரைகுறையாகப் படித்துவிட்டு எல்லாத்தையும் ஹராங்கிறான், வாழுறதே, சந்தோஷமாக இருப்பதே ஹராங்கிறான், மார்க்கமென்றால் சந்தோஷமாக இருக்காதேங்கிறான்” என்று கவிக்கோ சொன்னபோது என்னால்  ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. இவ்வளவு சுருக்கமாக இந்த ஜமாஅத்துகளின்மீது ஒருவர் இப்படி மிகச்சரியான விமர்சனம் வைக்கமுடியுமா? கவிக்கோ பேசும்போது ஒரு நாட்டாமைத்தனம், ’பெரிசு’த்தனம் அவ்வப்போது தலைகாட்டினாலும், ரொம்ப நேர்மையாக, சில பாடல்களையாவது படித்துவிட்டு வந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜமாஅத், அந்த ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு விவாதித்துக்கொண்டிருக்கிற அரைகுறைகளின் மீதான மிகக்காட்டமான, மிகச்சரியான விமர்சனம் அவர் வைத்தது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கவிக்கோ குறிப்பிட்ட மாமாவின் பாடல் நாகூரார் மகிமை என்ற வராத திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து அவரும், ஷேக் முஹம்மது அவர்களும் பாடிய ‘டைட்டில்’ பாடலாகும்.

தஞ்சை மன்னம் பிராதாப சிங்கு தந்தான் பெரியமினாரா

அன்பு நெஞ்சம் கொண்ட நான்கு முஸ்லீம்கள் நிறுவினர் நான்கு மினாராஅ

டச்சுக்காரன் கட்டியதாகும் தவச்சாலை பீர்மண்டபம்

நம் கூத்தாநல்லூர் மஹாதேவ அய்யர் கொடுத்தார் தங்க கலசம்

இந்த பாடலைக் குறிப்பிட்டு நாகூர் எவ்வளவு மத நல்லிணக்கம் கொண்ட ஊர் என்பதற்கு கவிக்கோ உதாரணம் காட்டினார்.

இறைவனை யாருக்குத் தெரியும்

நபி இரசூல் இல்லையென்றால்

நபியை யாருக்குப்  புரியும்

வல்ல நாயன் இல்லை என்றால்

என்ற பிரபலமான, எதிர்ப்புகளைக் கிளப்பிய பாடலையும் அவர் பாணியில் ஆதரித்துப் பேசினார்.

அதற்கு ஆதரவாக ஒரு ஹதீதைக் குறிப்பிட்டார். பெருமானாரிடம் ஒரு ஏழை சென்று தன் மகளுடைய திருமணத்திற்காக உதவி கேட்கிறார். உதுமானிடம் சென்று அல்லாஹ்வின் பெயரால்  கேட்கிறேன் என்று கேட்கச்சொல்ல, அவரும் உதுமானிடம் போய்க்கேட்க, உதுமான் சில வெள்ளிக்காசுகளைக் கொடுக்கிறார். அது போதாமையால், மறுபடியும் பெருமானாரிடம் முறையிடுகிறார் அந்த ஏழை. மீண்டும் அல்லாஹ் பெயரால் போய் உதுமானைக் கேட்கச் சொல்ல, அவரும் சென்று கேட்கிறார். மீண்டும் சில வெள்ளிக்காசுகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. மீண்டும் பெருமானாரிடம் சென்று அது போதாது என்று அந்த ஏழை முறையிட, இம்முறை ரஸூலுல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன் என்று உதுமானிடம் போய்க்கேளுங்கள் என்று பெருமானார் கேட்கச் சொன்னார்கள். அவர் போய் அப்படியே மறுபடியும் கேட்க, வீட்டைத்திறந்து நீயே போய் உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொள் என்று உதுமான் சொன்னார். வியந்துபோன அந்த ஏழை, அதற்கு விளக்கம் பெருமானாரிடம் கேட்க, அதையும் உதுமானிடமே போய்க் கேள் என்று சொல்ல, அவரும் போய்க் கேட்கிறார். அதற்கு உதுமான், “இறைவனை யாருக்குத் தெரியும்? நாங்கள் தவறாகவல்லவா புரிந்துவைத்திருந்தோம். அவனை சரியாகக் காட்டியவர் பெருமானாரல்லவா? அவர்கள் பெயரைச் சொல்லிக்கேட்டால் இந்த உலகத்தையே உங்களுக்குக் கொடுப்போம்” என்று உதுமான் கூறினார்” என்று கதையை முடித்து, உதுமான் சொன்னதைத்தான் கவிஞர் சலீம் சொல்லியிருக்கிறார் என்று முடித்தார்.

கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு கூடிய விரைவில் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டி வரும் என்று தோன்றியது. ரொம்ப வயதானவர்களும், சில இளைஞர்களும் தென்பட்டார்கள். யாருமே ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

பாரி பே நன்றி கூறினார். கடைசிக் கணங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளின் வழியாக எப்படி மாமாவைக் கூட்டி வந்தோம் என்றும், அப்போதே மாமாவின் முடிவாக அது இருக்கலாம் என்று பட்டதாகவும் அவர் கூறினார்.

மாமாவின் பாடல்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மாமா ஒரு பிறவிக் கவிஞன்.  ஒரு மகா கவி என்றுகூட நான் சொல்லுவேன். மாமா பள்ளிக்கூடம் போகவில்லை. (பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை). முதல் முஸ்லிம் நாவலாசிரியையான ஆச்சிமா என்ற எங்கள் பெரியம்மாவும் மூன்றாவதுவரைதான் படித்தார். பின்னர் எப்படி கவிதையும், இலக்கிய வகைகளும் பொங்கிப் பிரவகித்தன என்று யோசித்தேன். ஒன்றுமில்லை. மூன்று காவியங்கள் இயற்றிய வண்ணக்களஞ்சியப் புலவரின் ரத்தம், வித்து அது. எங்கள் எல்லாருக்குள்ளும் அது ஓடுகிறது. நாங்கள் வேறு எப்படி இருக்க முடியும்? ஆச்சிமா, ஆச்சிமாவின் மூத்த சகோதரர் ஹுசைன் முனவ்வர் பே மாமா, சலீம் மாமா, காரைக்காலில் பால்யன் என்ற பத்திரிக்கை நடத்திய முஜீன் மாமா, பகடிப் பேச்சாளராக விளங்கிய முராது மாமா, கவிதைகளாக எழுதிய, பேசிய காமில் மாமா, விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி புகழ் பெற்று, 80 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி, தயாரிப்பிலும் ஈடுபட்ட தூயவன் என்ற அக்பர் மாமா, நான் உள்பட – இது எப்படி சாத்தியம்? இது பரம்பரை. வண்ணக்களஞ்சிய வேரின் தொடர்ச்சி. இது எங்கெங்கோ கிளைவிட்டு இன்னும், இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பேச்சிலும், எழுத்திலும். கூடவே நாகூரும் உள்ளது. கேட்கவே வேண்டாம். ஊரின் archetype, குடும்ப archetype இரண்டும் சேர்ந்துகொண்டுள்ளது.

மாமாவிடம் எப்போதுமே ஒரு வெடிச்சிரிப்பு சிரிக்கும்.  மூன் டிவி பேட்டியின்போதும் அப்படி ஒரு முறை சிரித்தது. அதை மட்டும் வெட்டி வைத்துள்ளேன். மறுமையில் மாமா எப்போதும் அப்படியே சிரித்துக்கொண்டிருக்க இறைவன் அருள் புரிவானாக, ஆமீன்!

கவிஞர் ஜலாலுத்தீனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாமா மொகலே ஆஸம் திரைப்பட தமிழ் வெர்ஷனுக்காக சலீம் மாமா எழுதிய ஒரு பாடல். மோஹே பங்கட் பெ என்ற பாடல் தமிழில் “காதல் நதிக்கரையில்”. எள்ளளவும் ஒரிஜினலின் மெட்டு பிசகாது. பாடியவர் ஸ்வர்ணலதா. (அந்தக் குரலும் இன்று இல்லை, கவிஞரும் இல்லை).

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=iq7L2XXBaEg

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book