21

இந்த தலைப்பில் விஜய்டிவில் நடக்கும் விவாதங்கள் மிகவும் பிரபலமானவை. அதன் மூலமாக நண்பர் கோபிநாத்தும். ஆனால் எனக்கு இந்த தலைப்பின்மீது உடன்பாடில்லை. நீயா நானா பார்த்துவிடுவோம் என்ற போட்டி மனப்பான்மையும் எனக்கு உடன்பாடானதில்லை. நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும். போட்டி போட்டு ஒருவர் மூக்கை ஒருவர் உடைப்பது இறுதியில் பயனற்ற செயலாகத்தான் முடியும். அப்படிச் செய்வதனால் இருவருக்கும் நட்பு மலரப் போவதில்லை. பகை வளரலாம். நீயா நானா என்பது மனிதர்களைப் பிரிக்கும் ஒரு செயலாகத்தான் இருக்கும். சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத்காரர்களுக்கிடையே நிலவும் ’சகோதரத்துவம்’ போல.

நான் இங்கே விஜய் டிவியின் தலைப்பு பற்றி மட்டும் பேசவில்லை. பொதுவாகச் சொல்கிறேன். நீயும் நானும் என்று அந்த நிகழ்ச்சிக்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நீயா நானா-வில் உள்ள ‘கிக்’  இருக்காது! அந்த தலைப்பே ஒரு கனவில் கிடைத்ததாக கோபிநாத் நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் கூறினார்! விவாதத்தின் முடிவு அங்கேயே தெரிந்துவிட்டது!

நீயா நானா-வில் நடப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். க்ளைமாக்ஸ் இல்லாத படம் மாதிரி நிகழ்ச்சி முடிந்து போகும். ஏனெனில் இதுதான் சரி என்று முடிவு எடுக்கும் அதிகாரம் எந்த தனி நபருக்கோ, அல்லது தொலைக்காட்சிக்கோ இல்லை. இரண்டு பக்கமும் உள்ள கருத்துக்களை முன்வைக்கலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.  முடிவுகளை மக்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நிகழ்ச்சியின் சரியான உட்குறிப்பு.

அதோடு பொதுவாக தொலைக்காட்சியில் வருபவை எல்லாம் அதிகமாக ‘எடிட்’ செய்யப்பட்டவையே. மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள், தேவையற்ற கருத்துக்கள் – என்று கருதப்படும் எல்லாமும் – ‘எடிட்’ செய்யப்படும். அவை நீக்கப்பட்டு, ‘சுத்தப்படுத்தப்பட்ட’ பிறகுதான் நிகழ்ச்சி வெளியாகும். அதுவும் ஊடக தர்மம்தான். ஆனால் பல நேரங்களில் உண்மையானது ‘எடிட்’ செய்யப்பட்ட பகுதிக்குள்தான் ஒளிந்திருக்கும்!

கனவுகளைப் பற்றிய பதிவுக்காக நான் சென்றிருந்தபோது வேறு ஒரு பதிவுக்கான ரெகார்டிங் நடந்துகொண்டிருந்தது. அதில் திரு பழ. கருப்பையா ஒரு சிறப்பு விருந்தினர். அவர் பேசும்போது, சட்டத்தைவிட தர்மமே முக்கியம் என்பதைக் குறிக்க, ஷாபானு வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றம் தனிமசோதா மூலம் அதை செல்லாதபடியாக்கியதைக் குறிப்பிடும்போது, முஸ்லிம்கள் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை “செருப்பால அடிச்சான்ல” என்று சொன்னார். எனது கருத்தில் அவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசவில்லை. சட்டம் தன் கலாச்சாரத்தில் தலையிடக்கூடாது என்பதில் ஒரு சமுதாயம் பிடிவாதமாக இருந்ததல்லவா என்ற கேள்வியைத்தான் அவர் அப்படிக் கேட்டார். நிகழ்ச்சி வெளியானபோது அவ்வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டன. சட்டம் என்ன, “மாற்ற முடியாததா? அது முஹம்மது நபி ஓதிய குரானா?” என்று அவர் சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டனர்.

இது தவறல்ல. பிரச்சனை வரும் என்று தோன்றும் இடங்களைத் தவிர்ப்பது விவேகம்தான். அதே சமயம், அவர் எவ்வளவு காட்டமாக, உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார் என்பது அந்த எடிட்டிங் மூலம் தெரியாமலே போய்விடுகிறது. பிரமுகர்களின் உண்மையான முகம் இதன் மூலம் மறைக்கப்படுகிறது.

அதோடு, விவாதம்செய்ய வருபவர்களில் பெரும்பாலானோர் துறை சார்ந்த நிபுணர்கள் அல்ல. பொதுமக்கள்தான். அதனால் அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களாவது அந்த துறையின் அறிஞர்களாக இருந்தால் நல்லது. ஆனால் அழைக்கப்படும் விருந்தினர்களில் பலர் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்களே தவிர, துறை சார்ந்த சிறப்பு அறிவு பெற்றவர்களாக எப்போதுமே இருப்பதில்லை.

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்கூட இரண்டு முக்கிய விருந்தினர்கள் இருந்தனர். ஒருவர் அருணா பாஸ்கர். இன்னொருவர் மனவியல் நிபுணர் முஹம்மது ஷஃபி. அருணா பாஸ்கரை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. அவர் கடைசியில் ஒரு ’காமெடி பீஸ்’ ஆகிப்போனார். தான் முகலாயப் பேரரசர் அக்பரின் ராஜபுத்திர மனைவி, ஜோதா அக்பர் என்று ஃபதேபூர் சிக்ரிக்குப் போனபோது உணர்ந்து கொண்டதாகக் கூறி பிரபலமானவர் அவர். முன் ஜென்மம் பற்றிய நீயா நானா-வில் கூப்பிட வேண்டியவர்.

கனவுகள் பற்றிய விவாதத்துக்கு அவரை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. (முன் ஜென்மம் என்று ஒரு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் வருகிறது. அதில் கலந்துகொள்ளும் டிவி சீரியல் கதாநாயகிகள் மற்றும் உப கதா நாயகிகள் பலர் தான் முன் ஜென்மத்தில் ஒரு ராணியாக இருந்ததாக சொல்லிக்கொள்கிறார்கள். ’அதுஇதுஎது’ போன்ற காமடி நிகழ்ச்சிகள் இருக்கும்போது ’முன் ஜென்மம்’ என்று எக்ஸ்ட்ராவாக எதற்கு என்று எனக்கு விளங்கவில்லை).

அருணா பாஸ்கர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஏற்கனவே சொன்ன செய்திகளை திரும்பச் சொன்னார். அக்பரைத் தனக்குப் பிடிக்காது எனவும், அக்பர் தன்னை மணந்த பிறகு இன்னொரு பெண்ணையும் மணந்ததால் ஏற்பட்ட வெறுப்பு என்றும் சொன்னார்.

நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றின்படி, ஜோதாஅக்பர் என்று சொல்லப்பட்ட ராஜபுத்திரப் பெண் அமர் அல்லது அம்பர் என்ற ஊரின் ராஜா பர்மால் என்பவரின் மகள். ஜஹாங்கீர் என்ற மகனைப் பெற்ற தாய் என்றும், அப்படியில்லை, ஜோதா அக்பர் என்ற பெயர் அக்பரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும், ஜஹாங்கீரின் வரலாற்று நூலிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் உண்மையில் ஜஹாங்கீரின் மனைவிதான், ஷாஜஹானின் அம்மா என்றும், அக்பரின் ராஜபுத்திர மனைவியின் பெயர் மரியமுஸ் ஸமான் (அந்தக் காலத்தின் மரியம் அல்லது மேரி) என்றும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் வரலாற்றில் குழப்பமில்லாமல் கூறப்படும் ஒரு விஷயம், ஜோதா அக்பர் என்ற ராஜபுத்திர இளவரசி அக்பரின் மூன்றாவது மனைவி என்பதுதான். ஜோதாபாய் அக்பரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் என்பது ஜோதாவுக்குத் தெரியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை.

அதோடு, அன்றாடங் காய்ச்சிகளுக்கே சின்னச் சின்ன வீடுகள் இரண்டு மூன்று  இருக்கும்போது சக்கரவர்த்திகளுக்கு பல மனைவிகள் இருப்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. இங்கிலாந்தில் ஒரு மன்னருக்கு இன்னொரு பெண்ணைப் பிடித்துப் போய்விட்டால் (அவள் பெரும்பாலும் மனைவிக்கு பணிவிடை செய்யும் பெண்ணாகவே இருப்பார்), மனைவி மீது துரோக்க் குற்றம் சாட்டி அவரை டவர் எனப்படும் தனிக்கோட்டைக்கு அனுப்பி, தலையை வெட்டிவிடுவது வழக்கம்! உதாரணமாக எட்டாம் ஹென்றி அப்படித்தான் செய்தான். ஆனால் முகலாயர்கள் இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவர்கள். கூடப்பிறந்தவர்களைக் கொல்வார்களே தவிர, மனைவியைக் கொல்லமாட்டார்கள்! தான் அக்பரின் மனைவி என்று முன் ஜென்ம நினைவுவந்த அருணா அக்பருக்கு, சாரி, அருணா பாஸ்கருக்கு, தான் மூன்றாவது மனைவியாகத்தான் அக்பரிடம் போய்ச்சேர்ந்தோம் என்ற விஷயம் நினைவு வரவில்லையாம்! நான்காவதாக ஒரு பெண்ணை அவர் மணந்துகொண்டதால் அக்பரைப் பிடிக்காதாம்! அக்பர் அவருக்கு துரோகம் செய்துவிட்டாராம்! மனதை பாதிக்கும் நோய்கள்தான் எத்தனை விதம் !

போகட்டும். நல்லவேளையாக அவர் அரைமணியாகக் கொட்டிய கற்பனைக் கதைகளையெல்லாம் சுத்தமாக நீக்கிவிட்டு அவரை ஒரு டம்பி பீஸ்-ஆக உட்கார வைத்த விஜய்டிவியை பாராட்ட வேண்டும்! இன்னொரு முக்கியப் பிரமுகர் டாக்டர் ஷஃபியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஏன் சார் நீங்கள் சீஃப் கஸ்ட் இல்லியா என்று இரண்டு மூன்று பேர் என்னைக் கேட்டார்கள். என் எழுத்தாள ஈகோவைச் சொரிந்து கொள்ள அக்கேள்விகள் உதவும் என்பதால் நான் அவற்றை ஒதுக்கிவிடுகிறேன். இன்னும் தகுதியான சிறப்பு விருந்தினர்களை அழைத்திருக்கலாம்.

நிற்க இந்தப் பக்கம் 25 பேர், அந்தப் பக்கம் 25 பேர் என்று அமர்ந்திருப்பதால் மைக் கையில் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இரண்டு முறை கோபிநாத் ‘நாகூர் ரூமியிடம் கொடுங்கள்’ என்று என் பெயரைச் சொல்ல வேண்டியிருந்தது. அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கனவுகள் நமது உடல் நோயை, ஆழ்மன விருப்பங்களை, ஆழ்மன நினைவுகளை, நமது எதிர்காலத்தை, நமக்கோ நம் சொந்தக்களுக்கோ நடக்க இருக்கும் ஆபத்தை – இவற்றையெல்லாம் முன்னறிவிக்கும் தகுதி கொண்டவை என்று உதாரணங்களோடு விளக்கிச்சொன்னபிறகும், கனவுகளை ஒரு சமிக்ஞை என்று எதிரில் உள்ளவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ஒரு கேள்வி கேட்கப்பட்டது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

எதிர்ப்பக்கம் இருந்த ஒருவர் சைக்காலஜி பேராசிரியர் என்றும், அவர் ஜெனடிக்ஸ் பற்றிப் பேசுகிறார் என்று சப்பைக்கட்டு கட்டப்பட்ட அவர் உளறிக் கொட்டினார் என்றுதான் சொல்லவேண்டும். கார் ஏன் ஓடுகிறது என்று கேட்டால் நான்கு டயர்கள் இருப்பதால்தான் என்று அவர் சொல்கிறார் என்று என் நண்பர் டாக்டர் ஸ்ரீதரன் கூறியது ரொம்பச் சரி. விஷயத்தை அவர் உள் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஒரு முன்னறிவிப்புக் கனவை உதாசீனப்படுத்தியன் மூலம் தன் கணவரை இழந்த கதையை ஒரு இளம் சகோதரி கண்ணீருடன் சொல்லிக்காட்டியபோது அந்த ’சைக்காலஜி ப்ரொஃபசர்’ செய்த விவாதம் அபத்தத்தின் உச்சம். வாய்ப்புக் கிடைத்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று நான் விரும்பினேன். வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் சிறப்பாகப் பேசியதற்காக அவருக்கு ஒரு பரிசு கொடுத்ததுதான் தாங்க முடியாத சோகம். என்ன கொடுமை சரவணன்! அதில் நிச்சயம் ஏதோ அரசியல் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.

நிகழ்ச்சி முடிந்த பிறகும், நடந்து கொண்டிருந்த போதும்கூட, எனக்கு நிறைய அலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தன. அவற்றில் பல புகழ் மொழிகள். நண்பர்களும் சொந்தக்காரர்களும். ஆனால் இரண்டு அழைப்புகளும் ஒரு மின்னஞ்சலும்தான் குறிப்பிடத் தக்கவை:

  1. நண்பர், எழுத்தாளர் தாஜிடமிருந்து வந்த அழைப்பு
  2. நண்பர், எழுத்தாளர் சங்கர நாராயணனிடமிருந்து வந்த அழைப்பு
  3. நண்பர் ஸ்ரீதரனிடமிருந்து வந்த மின்னஞ்சல். ஸ்ரீதரன் பச்சையப்பன் கல்லூரியில் கணிதத் துறையின் தலைவராகவும், பின்பு கணிணித் துறைத் தலைவராகவும், பின்பு சென்னை புதுக்கல்லூரியில் உள்ள ஐடி கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர்.

நிகழ்ச்சி தனக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அது பற்றி எழுத இருப்பதாகவும் தாஜ் தெரிவித்தார். அவர் என்ன எழுதப்போகிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆசை.  கனவுகள் மிகவும் சீரியஸான விஷயம் ஆனால் அவை பற்றி தீவிரமாக எதுவும் பேசப்படவில்லை என்று சங்கர நாராயணன் கூறினார். அது உண்மைதான்.

ஆனால் சீரியஸாகவும் மிகத்தீவிரமாகவும் பேசமுடிகின்ற சூழல் எண்டர்டைன்மெண்ட் மீடியாவாகச் செயல்படும் ஒரு ஊடகத்துக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.  அவர்களுக்கென்று சில வரம்புகள் இருக்கும். உதாரணமாக நேரம். ஐம்பது பேரை  அழைத்து இரண்டு மணி நேரம்பேச வேண்டுமென்றால் ஒருவருக்கு எத்தனை நிமிடங்கள் கொடுக்க முடியும்? அதற்குள் அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் எவ்வளவுதான் பேச முடியும்?

நண்பர் ஸ்ரீதரன் அனுப்பிய ஆங்கில மின்னஞ்சல்:

13-8-2012

My Dear Rafee

I watched the நீயா நானா program. You were the only person to mention the name & work of Carl Gustav Jung, though there were professional psychologists & university professors! Your comment on the psychologist who picked up an insensible argument with the young lady who lost her husband in a motor cycle accident true to her dream, was most appropriate; my wife & I felt relieved that you recorded dissent (on behalf of thousands of viewers like us).  His knowledge is half-baked. His reference to neuro-chemical events in the brain as the primary cause for mental states is like saying: ‘car moves because the wheels are rotating’!  It is disappointing to me that he got selected for a prize. Your reference to the Lincoln’s dream, the necessity of relaxed state, and the unconscious as the agent causing dream were timely, appropriate & well received. Gopinath gave due attention to you.

It is surprising to me that certain important points (from the point of view of dreams as symbolic foretelling of events) have not emerged from the discussion that lasted for about an hour & a half, like (a) distinction between big dreams (Jung’s term) & ordinary dreams, (b) some people’s propensity for prophetic dreams (like the ability for ESP), (c) the collective & personal unconscious, (d) Jung’s hypothesis (jointly with the physicist Pauli)  that the unconscious psyche has connection with the nature (the UNUS MUNDUS).

பேச்சு வார்த்தை மூலமாக  சுமூகமான முடிவுக்கு வர முடியும் என்பது வேறு. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் மூலம் பேச்சு மூலமாக எந்த முடிவுக்கும் வர முடியாது. எங்க ஆத்துக்காரரும் ஓடினார் என்பதுபோல,  நம் முகத்தைத் தொலைக்காட்சியில் நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு. இதைத்தாண்டி என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் கோபிநாத்-தான் பாவம். கோட்டையும் போட்டுக்கொண்டு, அவ்வப்போது செய்யப்படும் மேக்-அப்பையும் பொறுத்துக்கொண்டு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். ஒரு மனிதன் பிரபலமாவதற்குக் கொடுக்கும் விலை பற்றி நாம் யோசிப்பதே இல்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book