22

பில்லி சூனியம் செய்யப்படுவதில் நம்பிக்கையில்லாதவர்கள் இக்கட்டுரையைப் படிக்க வேண்டாம். ஆமாம். அன்றாடம் செய்யப்படும் பில்லி சூனியம் பற்றிய கட்டுரை இது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அன்றாடம் சூனியம் வைக்கப்படும் லட்சக் கணக்கான மக்களில் நீங்கள் ஒருவர். ஏன் நான்கூடத்தான். எனக்கும் உங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் நான் எப்படி சூனியத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வது என்று தெரிந்து கொண்டேன். அதைச் சொல்லி உங்களையும் காப்பாற்றலாம் என்றுதான் இக்கட்டுரை எழுதுகிறேன்.

 

சூனியம் வைப்பதற்கு மொழி தேவையில்லை. அல்லது எந்த மொழியிலும் வைக்கலாம். இது தமிழ் சூனியம். ஆமாம். நம் வீட்டுக்குள்ளேயே 24 மணி நேரமும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூனியம். சூனியம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை, கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று சொன்னால், வசியம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 

எங்கள் வீட்டுக்குள்ளேயேவா? அதுவும் நாள் முழுவதுமா? எப்படி? யார் வைப்பது? இப்படி ஆயிரம் கேள்விகள் உங்களுக்கு இப்போது வருகின்றனவா? அதற்கெல்லாம் ஒரே பதில்தான். வசியம் வைக்கப் பயன்படுத்துவது தொலைக்காட்சிப் பெட்டி. ஆமாம். அதற்குள்ளிருந்துதான் நாள் முழுக்க நம்மை வசியம் செய்கிறார்கள். அது என்ன வசியம் என்று கேட்கிறீர்களா? விளம்பரங்களைத்தான் சொல்கிறேன்.

 

விளம்பரங்களால் நாம் தினமும் வசியப்படுத்தப்படுகிறோம். நம்மை அறியாமலே. அவற்றால் mass-hypnotize செய்யப்படுகிறோம். ஆமாம். நாம் மெத்தப்படித்தவர்களாக இருந்தாலும் சரி. இதுதான் நடக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் நாம் அவற்றால் கவரப்படுகிறோம். அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம்.

 

விளம்பரங்களின் பொதுவான விதி உண்மையைச் சொல்லக்கூடாது என்பது. ஆமாம். எப்போதுமே மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களைத்தான் உண்மைகளாக அவை காட்டுகின்றன. ’தூள்’ படத்தில் ஜோதிகாவைப் பார்க்கும் விவேக், “ஏய், திம்ஸ் ஈஸ்வரி, இப்பவும் அந்த ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ண ஊத்தி சாப்பிடுற பழக்கம் இருக்குதா?” என்று கேட்பார், நினைவிருக்கிறதா?  இதயம் நல்லெண்ணய் விளம்பரத்தில் ஜோதிகா அப்படித்தான் ஊற்றுவார்.

 

விளம்பரங்களில் வரும் காட்சிகள், வார்த்தைகள், வண்ணங்கள் இப்படி எல்லாமே திரும்பத் திரும்பக் காட்டப்பட்டும் சொல்லப்பட்டும் நமக்கே தெரியாமல் நம் ஆழ்மனதில் இடம் பிடித்துவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சோப்பு விளம்பரத்தை நீங்கள் தொடர்ந்து ஒரு மாதத்துக்குப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் விரும்பி அதைப் பார்ப்பதில்லை. அது உங்கள் கண்களில் படுகிறது. சரி. என்றாலும் ஒரு மாதம் கழித்து சோப்பு வாங்க வேண்டும் என்று நீங்கள் கடைக்குப் போனால், உங்களை அறியாமலே உங்கள் கைகள் அந்த விளம்பரத்தில் பார்த்த சோப்பை எடுக்கும்.அல்லது இந்த முறை வாங்கித்தான் பார்க்கலாமே என்று தோன்றும். இங்குதான் சோப்பு வசியம் ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட Unconscious Influences-லிருந்து நாம் விடுபட விளம்பரங்களை விமர்சன நோக்கோடு பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான சில குறிப்புகள் இங்கே.

 

காத்ரெஜ் சிந்தால் சோப்பு

 

சோப்பு போடுவதில் பல வகை உண்டு. அதிலும் குறிப்பிட்ட ஒரு சோப்பை நாம் போட வேண்டும் என்பதற்காக நமக்குப் போடப்படும் சோப்புதான் சோப்பு விளம்பரங்கள் என்று சொன்னால் அது வழுக்காத உண்மை.

 

ஆறு பெண்கள் காட்டப்படுகிறார்கள். ஆறு வகையான பெண்கள் என்றும் சொல்லலாம். காதலி மாதிரி ஒருத்தி, போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர்ந்தது மாதிரி காக்கிச் சீருடையில் ஒரு பெண், ஒரு ஆணோடு (காதலன் / கணவன்) ஒரு பெண், பஸ்ஸில் சின்னப் பெண்ணோடு ஒரு அம்மா, இன்னும் ஒரு பெண், மொட்டை மாடியில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு ஒரு பெண்.

 

அப்பெண்கள் அனைவரும் சிந்தால் சோப்பை ஏதோ காதலனிடமிருந்து வந்த கடிதம் மாதிரி கையில் வைத்துப் பார்க்கிறார்கள். திருப்பிப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பு. சிந்தாலின் பின்பக்கம் ஏன் பெண்களுக்கு புன்னகை வரவழைப்பதாக இருக்கிறது என்று ஒரு ஆணாக நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அதற்கு பதில் கிடைத்துவிடுகிறது:

 

“சோப்பு உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்,விலை உங்கள் முகத்தில் பொலிவூட்டும், சிந்தால் இப்போது ஏழு மற்றும் 17 ரூபாயில் கிடைக்கிறது ’எக்ஸ்பெர்ட்’ பாதுகாப்பு இப்பொழுது எல்லோருக்கும்” என்ற குரலில்.

 

ஓஹோ விலைதான் புன்னகைக்குக் காரணமா? நான் தேவையில்லாமல் வேறு ஏதேதோ யோசித்துவிட்டேன்! பாலஸ்தீனில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் அவஸ்தைக்குள்ளாக்கப்படும் பெண்கள் அத்தனை பேருக்கும் இந்திய அரசின் சார்பில் சில லட்சம் சிந்தால் சோப்புகளை வாங்கி அனுப்பினால் ரொம்ப நல்லது. எக்பர்ட் பாதுகாப்பு எல்லோருக்கும் கிடைக்குமல்லவா?

 

ஃபி அமா டி வில்ஸ் சோப்பு

 

திடீரென்று தீபிகா படுகோனே பரவசமடைந்து ஓடி வருகிறார். நிச்சயம் அடுத்தது படுக்கையறைக் காட்சிதான் என்று ஆர்வமாகப் பார்த்தால் இந்த சோப்பைப் போட்டு ’டப்’பில் இறங்கிக் குளிக்கிறார்! அவர் குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவர் காதலனும் பரவசமாக உள்ளே வருகிறார். அவர் கையிலும் ஒரு ஃபி அமா டிவில்ஸ்! அவரும் குளிக்கப் போகிறார்! பரவசங்களுக்குப் பிறகு குளியல் என்பதுதான் இந்திய வாழ்க்கை முறை. ஆனால் இங்கே குளியலே ஒரு பரவசமாக இருக்கிறது! அதிலும் சோப்பை உடம்பில் தேய்த்துக் கொள்ளும்போது அவர் முகத்தில் தெரியும் உணர்ச்சி இருக்கிறதே, அதைப்பார்க்கும்போது அது சோப்புதானா இல்லை வேறு ஏதாகிலுமா என்று சந்தேகம் ஏற்படுகிறது! ஆரம்பத்தில் எனக்கு தீபிகாவின் பெயர் பிடிபடவில்லை. தீபிகாவை யாரோ படுக்கச் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ’படுகோனே’ என்பதும் அவர் பெயர்தான் என்று பின்னால்தான் தெரிந்தது! சோப்பு விளம்பரங்களில் இருக்கும் ஆப்பு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

 

ஈனோ அசிடிட்டி பாக்கட்

 

பெண்ணின் தந்தை ஏதோ ஸ்வீட்டை ரகசியமாக கபளீகரம் செய்கிறார். ”கண்ட்ரோலே கிடையாது” என்று அவர் மனைவி(யாகத்தான் இருக்க வேண்டும்) சொல்கிறார். ஏதோ ரோஸ்கலர் ஜெலுசில் ஒன்று ஊற்றிக் காட்டப்படுகிறது. ஆனால் பிறகு ஈனோ கரைத்துக் குடித்தால் அசிடிட்டி போய்விடும் ஆறே நொடிகளில் அது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள். இதில் ஜெலுசிலைக் காட்டிவிட்டு ஈனோ பற்றிக் காட்டியது விளம்பர நியதிகளுக்கு (ethics) எதிரானது. ஒரு மனிதர் கட்டுப்பாடே இல்லாமல் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தாலும் ஈனோ குடித்தால் போதும் அவர் காப்பாற்றப்பட்டுவிடுவார் என்ற முட்டாள்தனமான உட்குறிப்பும் இருக்கிறது.

 

லிட்டில் நாதெல்லா

 

குழந்தைகளுக்கான தங்க நகைகளுக்கான இந்த விளம்பரத்தில்,  “லா,லா,லா லிட்டில் நாதெல்லா ” என்று பாடப்படும் வார்த்தைகளும் அதன் மெட்டும், வசீகரமான கோரஸ் குரல்களும் தாலாட்டை அடிப்படையாக வைத்ததுபோல் தோன்றுகிறது. விளம்பர உலகில் நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் பண்பாடும் எப்படியெல்லாம் உத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்க்கும்போது வியப்பாகத்தான் உள்ளது. தங்கம் விற்கும் விலையில், நகை எதுவுமே கேட்காத மாப்பிள்ளைகளையே திருமணம் செய்துகொள்ளப்போவதாக அழகான பெண்கள் அத்தனை பேரும் முடிவெடுத்துள்ளார்களாம்!

 

லா லா லா / கட்டில் போதும்லா!

 

கல்யாண் ஜுவல்லர்ஸ்

 

உருண்டை திலகம் பிரபு நடிக்கும் இந்த விளம்பரத்தில் அவர் ஆபீசில் இருக்கும்போது அவர் மகள் பொம்மை வாங்கி வரச் சொல்லி அலைபேசுகிறாள். எல்லாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. ஸ்பென்சர் ப்ளாசா உட்பட. ஆனால் பிரபு ஒரு கடை முதலாளியின் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தி, வேண்டிக் கேட்டுக் கொள்வதன் பேரில் ஒரு கடை திறக்கப்பட்டு குழந்தை விரும்பிய பொம்மையை வாங்கிக் கொண்டு போகிறார்.

 

”உறங்காத எதிர்பார்ப்புகள், விழித்திருக்கும் நம்பிக்கை / கல்யாண் ஜுவல்லர்ஸ் / நம்பிக்கை – அதானே எல்லாம்” என்ற சொற்கள் பின்புலத்தில் கம்பீரமான குரலில் கேட்பதோடு முடிகிறது விளம்பரம்.

 

உறங்காத / விழித்திருக்கும் இரண்டும் ஒன்றுதானே? சரி போகட்டும். இந்த விளம்பரத்தில் அந்த இரண்டுமே அந்தக் குழந்தைதான். அப்ப, அதுதான் கல்யாண் ஜுவல்லர்ஸ். அப்போ அதற்கு பொம்மை வாங்கிக் கொடுக்கும் அப்பா யார்? அதுவும் கல்யாண் ஜுவல்லர்ஸாகத்தான் இருக்கும். நம்புவோம். நம்பிக்கை, அதானே எல்லாம்?

 

சின்னிஸ் ஊறுகாய்

 

”போர் சாப்பாட்லேருந்து ஜோர் சாப்பாடு” என்று ஊறுகாய் பாட்டிலைத் தயாராக பின்னால் மறைத்து வைத்திருந்து எடுத்துக் காட்டி (டைரக்டோரியல் (ஊறுகாய்) ‘டச்’ என்பது இதுதானோ?) நடிகை ஸ்னேகா சொல்லும் விளம்பரம்.

 

இட்லி, தோசை, சப்பாத்தி, புராட்டா, இடியாப்பாம், சோறு என்று எல்லா வகையான உணவுக்கும் சின்னீஸ் ஊறுகாய் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அது ’போர்’சாப்பாடாக இருக்க வேண்டும். தொட்டுக்கொள்ள, சாரி, ஒத்துக்கொள்ள ஸ்னேகா வருவாரா?

 

டாட்ஸ் அப்பளம்

 

டாட்ஸ் அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்னேகா போடும் ஆட்டம் இருக்கிறதே…ஆஹா. ”அப்பளம் மாதிரிதான் உப்பிக் கிடக்கு” என்றார் என் அருகில் விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர். அவர் எதைச் சொன்னார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. கன்னமாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். ஆனால் ஒரு அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஏதோ ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகிவிட்ட மாதிரி ஒரு பெண் குதூகலிப்பாளா என்றெல்லாம் கேட்கக்கூடாது. சில லட்சங்களைக் கொடுத்து “இதைப் பிடித்துக் கொண்டு சில வினாடிகள் டைட் பேண்ட் போட்டுக்கொண்டு ஆடம்மா” என்று சொன்னால் ஆடமாட்டீர்களா? அப்பளம் என்ன, கொப்பளத்தைப் பிடித்துக்கொண்டுகூட குதூகலமாக ஆடலாமே!

 

டானிஷ்க் நகை

 

வருண் என்று அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் ’செட்டில்’ ஆகி இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றி கார் ஓட்டிக்கொண்டு போகும் மகளிடம் சிபாரிசு செய்கிறார் தந்தை. ஆர்வமில்லை என்று அவள் சொல்கிறாள். போகும் வழியில் காரை நிறுத்தி டானிஷ்க்கில் நகை எடுக்கச் செல்கிறாள் அம்மா. அதைப்பார்த்து தானும் சில நகைகளை அணிந்து பார்க்கிறாள் மகள். பின் காரில் வரும்போது என்ன பேர் சொன்னிங்க என்று அப்பாவைக் கேட்கிறாள்.

 

பெண்ணின் மனதை அறிந்த, சைகாலஜி தெரிந்த அம்மாதான் இந்த விளம்பரத்தின் முக்கிய பாத்திரம். ஆனால் முக்கிய பாத்திரம் சொல்லும் செய்தி என்ன? நகைகளைப் பார்த்ததும் பெண்களுக்குக் கல்யாண ஆசை வருகிறது! நகைகளால்தான் இப்போதெல்லாம் கல்யாண ஆசையே பெண்களுக்கு போய்க்கொண்டிருக்கிறது என்கிறது சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று!

 

கார் ஓட்டுகின்ற, அமெரிக்க மாப்பிள்ளை தேடுகின்ற பெண்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். என்றாலும் நகைகளைப் போட்டுக் கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிட முடியுமா என்ன? இந்த விளம்பரத்தின் செய்தி பெண்களைக் கேவலப்படுத்துவதாகவும், இயற்கைக்கு மாறானதாகவும் உள்ளது. ஆணை வைக்க வேண்டிய இடத்தில் தங்க நகைகளை வைக்கிறது!

 

ஆரோக்யா பால்

 

நல்ல ஒரு விளம்பரத்துக்கு உதாரணமாக இதை நான் சொல்லுவேன். ஒரு கிராமத்தில் மாட்டுப் பண்ணை வைத்து பால் கறக்கும் ஒரு பெண் பேசுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் மொழி மண்ணின் மொழி. மாடுகளைப் பற்றி அந்தப் பெண் கூறும் ஆரம்ப வசனம் முக்கியமானது: ”மாடுங்கன்னா எனக்கு ரொம்பப் புடிக்கும், கொழந்தைங்கள எப்புடி பாத்துக்குவனோ அப்டிதான் மாடுங்களையும் பாத்துப்பேன்” இந்த வார்த்தைகளை யாராவது எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். விளம்பரம் என்பதைத் தாண்டி, உயிரினங்களைக் கையாள்வது பற்றிய அக்கறையை அது காட்டுகிறது. நிச்சயம் நமது பாராட்டுக்குரியது. இயல்பாக அந்தப் பெண் பேசுவதும், மிகையில்லாத காட்சிகளும்கூட இந்த விளம்பரத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.

 

”நலம், அன்புடன் நமது கிராமங்களில் இருந்து ஆரோக்யா மில்க்” என்ற வாசகங்களுடன் இந்த விளம்பரம் முடிகிறது. மண்ணை விரும்புபவர்கள், மாட்டை விரும்புபவர்கள், கிராமங்களை விரும்புபவர்கள் நிச்சயம் ஆரோக்யா பால் பாக்கட்டையும் விரும்புவார்கள்.

 

ஏர் டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்

 

”காலு கிலோ கறுப்புப் புளி மஞ்சத்தூளுடா” என்று பாடிக்கொண்டே ஒரு சிறுவன் கடையில் சாமான் வாங்க வரும் இந்த விளம்பரம்தான், சமீபத்தில் வந்த பொருத்தமான, ரசிக்கத்தக்க விளம்பரம். என் பரிசும் இதற்குத்தான்.

நன்றி தமிழோவியம் நவம்பர் 16, 2011

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LdF_t0Ra8ZE

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book