8

எனக்கு நண்பர்கள் ஒருசிலர்தான் உண்டு. அதில் ஆபிதீனும் ஒருவர் (இதை அவர் மறுக்கலாம். அந்த உரிமை அவருக்கு உண்டுதானே)! எண்பதுகளில் நாங்கள் கடிதங்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக எழுதிக் கொண்டோம். இப்போது என் கையெழுத்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாகவும் வாந்தி வாந்தியாகவும் வருகிறது. லாப்டாப்-புக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சில ஆண்டுகளாகவே எனக்கு 102 விரல்கள் வந்துவிட்டன.  கீபோர்டைத்தான் சொல்கிறேன். அவற்றைக் கொண்டுதான் இந்த கட்டுரையைக்கூட ’அடித்துக்’ கொண்டிருக்கிறேன். (இந்த சொல்லும் ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த சொல்)! சவுதி போனதிலிருந்து அவருடைய சிந்தனையெல்லாம் ஒரே ’திசை’யை நோக்கித்தான் இருந்து கொண்டிருக்கிறது (ஆமாமா, கஃபதுல்லாஹ்வைத்தான் சொல்கிறேன்)!

சரி விஷயத்துக்கு வருகிறேன். அந்தக் காலத்தில் — ஐ மீன் எண்பதுகளில் அல்லது எழுபதுகளின் கடைசியில் — நான், ஆபிதீன், சாரு நிவேதிதா எல்லாரும் கடித ‘இலக்கியங்கள்’ படைப்பதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். சாரு 50 பக்கங்கள்கூட எழுதுவார். ஆபிதீன் சவுதியிலிருந்து எழுதுவார். நானும் பதில்கள் ’போடுவேன்’ (இந்த வார்த்தைகூட…சரி, வேண்டாம்).

அந்தக் கடிதங்களையெல்லாம் ஓட்டை போட்டுப் பத்திரப்படுத்தக் கூடிய ஒரு கோப்பில் வைத்திருந்தேன். அதில் சாருவின் கடிதங்களெல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை. (நல்ல வேளை, அவைகள் காணாமல் போயின). ஆபிதீன், தாஜ், நான் கீழக்கரை கல்லூரியில் பணி புரிந்தபோது என்னோடு பணி புரிந்த கவிஞர் அக்பர் அலி ஆகியோரின் கடிதங்களும் அதில் இருந்தன.

நேற்று இரவு சாப்பிடப் போனபோது, நிறைய கோப்புகள் போடப்பட்டிருந்த ஒரு பெரிய பையைக் கொண்டு வந்து காட்டிய என் மனைவி, வீட்டைச் சுத்தப் படுத்தும்போது அகப்பட்டது என்றும், அதில் எனக்குத் தேவையானது ஏதும் இருக்கிறதா என்று பார்க்கும்படியும் கூறி வைத்து விட்டுச் சென்றாள்.

நான் ஒவ்வொரு கோப்பாகத் திறந்து பார்த்தேன். சிலவற்றில் என் கதைகள், கட்டுரைகள், கவிதைகளின் ஜெராக்ஸ் இருந்தன. தேவையானதையெல்லாம் வலது பக்கமும் தேவையில்லாததையெல்லாம் இடது பக்கமும் வைத்துக் கொண்டே வந்தேன். (என் எழுத்தெல்லாம் இடது பக்கம்தான்).

அப்போதுதான் அகப்பட்டன ஆபிதீனின் கடிதங்கள்.

எழுத்தா அது! ஆபிதீனுக்கு பல திறமைகள் உண்டு. ஓவியம், பாடல் பாடுவது, எழுத்து, பேச்சு என. எதிலுமே

அவர் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.  தன் திறமைகளில் எதையாவது ஒன்றைக் கொண்டு தன்னால் வெற்றிகரமாக இந்தியாவில் வாழ முடியுமென்ற நம்பிக்கை அவருக்கு ஏன் வராமல் போனது, என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அவரது எழுத்தில் கிண்டலும் கேலியும் கொட்டித்தான் கிடக்கும்.

ஓவியம். அது ஒரு அபாரமான திறமை. அதில் ஆபிதீன் ஒரு இயற்கை ஓவியர். உங்களைப் பார்த்த மாத்திரத்தில் இர்ண்டு மூன்று நிமிடங்களில் தத்ரூபமாக கோட்டோவியமாக வரைந்து விடுவார். அவர் வீட்டு சுவர் முழுவதும் ஹென்றி டேவிட் தோரோ, ஷே குவேரே என்று இண்டியன் இங்கில் வரைந்து வைத்திருப்பார்.  அப்படி ஒரு அபார திறமை. அவருடைய கோட்டோவியங்களும் அதில் அவர் காட்டும் க்ரியெட்டிவிட்டியும் எப்போதுமே அசத்துபவை.

அவருடைய எழுத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். எழுத்து என்றால் இலக்கியத் திறமை அல்ல. அது பற்றி நான் இங்கே பேசவில்லை. அவர் எழுதும் முறை. ஒரு போஸ்ட் கார்டில் அவர் எழுதினாலும் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற அழகான எழுத்துக்கள் அவரைவிடப் பொடி எழுத்தில் எழுதிய ஒருவரை நான் இதுவரை பார்க்கவில்லை. அவ்வளவு சின்னதாகவும், அவ்வளவு அழகாகவும் எழுத முடியும் என்று அவரது கடிதங்களைப் பார்த்துத்தான் நான் கற்றுக் கொண்டேன்.

அகப்பட்ட ஆபிதீனின் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் முதலியன் எனக்கு பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டுவிட்டன. அவருடைய படைப்புத் திறமைக்கு — நான் அவருடைய மகனையும் மகளையும் பற்றி இங்கே சொல்லவில்லை — ஒருவகையில் அவருடைய வாப்பா காரணம் என்று சொல்லவேண்டும். எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் அவருடைய வாப்பா அவருக்குப் பார்த்திருந்த பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டதை எழுதியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறேன்:

உமக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் பெண் கோட்டையிலே வீற்றிருந்தவர்களின் வாரிசு. கோலோச்சிய குடும்பத்தின் பரம்பரை. முன்னாள் ஆளுநரும், தலைமை நீதிபதியுமான ஜஸ்டிஸ் அவர்களின் உடன் பிறந்த தம்பி மகள். தரமான தேர்வு. புகழ் மிக்க குடும்பம். ‘பெண்ணுக்கு ஆசைப்படு, அல்லது பொன்னுக்கு ஆசைப்படு’ என்பது பழமொழி. அழகில் தெய்வத்தைக் காணலாம். ஆண்டவனைப் பார்க்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் வாக்கு. அந்த வகையில் பொன்னைத் தள்ளிவிட்டு பெண்ணையே, அழகையே தேர்ந்தெடுத்திருக்கிறோம். நாகூரில் அழகு மிக்க பெண்கள் நான்கு என்று வைத்துக் கொண்டால் அதில் தலைம தாங்கும் தகுதி இந்தப் பெண்ணுக்குத்தான் உண்டு. இது ஊரின் ஏகோபித்த அபிப்பிராயம்.

நீர் ஓவியர் — எழுத்தாளர். உமது ரசனைக்கேற்ற பெண்ணையே எங்கள் மருமகளாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். தமிழ் ஆச்சாரப்படி சொல்வதானால் லட்சுமியையே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம்…

வாப்பாவின் கடிதம்!

என்று எனக்கு அனுப்பிய, ‘பதில் போடாத ரஃபிக்கு புது வருட வாழ்த்துக்கள்’ என்ற வாழ்த்துக் கடிதத்தின் பின்னால் நுணுக்கமாக — ஐ மீன், நுணுக்கி நுணுக்கி — எழுதியிருந்தார் ஆபிதீன்.

நாகூர் தமிழ் முஸ்லிம்களின் தமிழ் ஈடுபாட்டையும், தமிழ்ப் புலமையையும் இதிலிருந்தும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். முக்கியமாக ஆபிதீன் வாப்பாவின் கடிதத்தின் கடைசி வரி. அது அவர்கள் எத்தகைய அருமையான மனிதர் என்று எனக்குச் சொல்லுகிறது. (என்ன, சரியாக ஒரு மகனை வளர்த்தெடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது, என்ன செய்ய? லண்டனுக்குப் போய் குளிருகிறது என்று சொல்லி ஓடி வந்து, துபாய் போய் மணல் சூட்டிலும் மனச் சூட்டிலும் வெந்து கொண்டிருப்பவரை வேறு என்ன சொல்ல!)

அவர் வப்பா எழுதிய கடைசி வரிகளைப் படித்து சிலர் கொதிப்படையலாம். நான் ‘வணக்கம்’ என்று எழுதிய ஒரு வார்த்தைக்காகவே சகோதரத்துவ இணக்கம் வேண்டாமென கொதிப்படைந்த புழுக்கள், ஸாரி குழுக்கள், உண்டு. அப்படிப்பட்ட சமுதாயச் சகோதரர்களுக்கு வணக்கத்திற்குரிய அல்லாஹ் ’ஹிதாயத்’ செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு கடிதத்தில் எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமாவை அப்படியே கடிதத்தின் உள்ளேயே ’வாட்டர் மார்க்’ மாதிரி வரைந்திருந்தார். அது இப்போதும் பார்க்க மிகவும் பிரமிப்பூட்டுவதாகவே இருக்கிறது. (மேலே கொடுத்திருக்கிறேன்).

அவருடைய கடிதங்கள் அனைத்தையுமே ஸ்கேன் செய்து ’போடலாம்’ — ச்சே, ஆபிதீனுக்குப் பிடித்த இந்த வார்த்தையே அடிக்கடி வருகிறது என்ன செய்ய ? — என்று பார்த்தேன். ஆனால் அதில் அவர் புழங்கிய சில வார்த்தைகள் வயது வராதவர்களுக்கு மட்டும் என்பதால், வயது வந்த உங்களுக்கு வேண்டாமென அவற்றைத் தவிர்த்துவிட்டேன்!

பார்த்துவிட்டு எழுதுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book