13

சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் என்ற எனது நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஏற்கனவே வெளிவந்துள்ளது. அது மீண்டும் சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடாக வர இருக்கிறது. அதிலிருந்து ஒரு அத்தியாயம் உங்களுக்காக.

இறைவன் மனித உடலை முதலில் படைத்தான். அதற்குள் புகுந்துகொள்ளுமாறு ஆன்மாவிடம் சொன்னான். ஆனால் சிறைப்பட்டுவிடுவோமே என்று ஆன்மா தயங்கியது. இறைவன் வானவர்களை அழைத்து பாடவும் ஆடவும் சொன்னான். அந்த இசையில் மயங்கிய ஆன்மா தன்னை மறந்து அந்தப் பரவசத்தில் மனித உடலினுள் புகுந்துகொண்டது. எனவே மனிதனுக்கு இசை மீது ஏற்படும் ஆர்வம் பிறப்புக்குப் பின்னர் ஏற்படுவதல்ல. அது அவனோடு கூடப்பிறந்தது

 

— இசைக்கலைஞர், சூஃபி ஞானி ஹஸ்ரத் இனாயத் கான்.

 

Akbar and Tansen visit Swami Haridas in Vrindavan.காட்டுவழியாக ஒருநாள் போய்க்கொண்டிருந்த அவர் ஒரு இசை மேதை. அவருடைய காலத்தில் அனைவராலும் அறியப்பட்டவர். அவருடைய புகழ் எட்டுத்திசைகளிலும் பரவியிருந்தது. ராஜா மான்சிங்கின் (கிபி1486-1516) அவையில் ஆஸ்தான  பாடகராக இருந்தவர். அவர் வேறு யாருமல்ல. ஸ்வாமி ஹரிதாஸ் என்ற புகழ் பெற்ற இசை மேதை.

 

ஏன் அவர் காட்டுவழியாகப் போகவேண்டும் என்ற வரலாற்றுத்தன்மையைக் கெடுக்கும் சந்தேகம் எழலாம். வேண்டுமென்றே அவர் காட்டுவழியில் போய்க்கொண்டிருந்திருக்க நியாயமில்லை. அவர் போக வேண்டிய வழியே காட்டுவழியாகத்தான் இருந்திருக்கும். ராஜாபாட்டைகளைத் தவிர மற்றபகுதிகள் பெரும்பாலும் அந்தக்காலத்தில் அப்படித்தானே இருந்திருக்கும்?

 

அப்போது ஒரு புலியின் கர்ஜனை கேட்டது. ஆனால் உண்மையில் அது ஒரு புலியின் சப்தமல்ல, ஒரு சிறுவன் புலியைப் போல எழுப்பிய ஒலிதான் என்று அறிந்தபோது ஹரிதாஸுக்கு வியப்பேற்பட்டது. அதைவிட ஆச்சரியம் புலியின் ஒலியை எழுப்பிய சிறுவனுக்கு அப்போது ஐந்து வயதுதான்! அந்தச் சிறுவன்தான் பின்னாளில் தீபக் ராகம் பாடி தீயை மூட்டிய தான்சேன் ! தான்சேனுக்குக் கொஞ்சகாலம் குருவாக இருந்து வட இந்திய சங்கீதமான ஹிந்துஸ்தானியை, குறிப்பாக ’த்ருபத்’ என்ற வகை இசையை சொல்லிக் கொடுத்தவர் ஸ்வாமி ஹரிதாஸ்.

 

தான்சேனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது. மிருகங்கள், பறவைகளைப்போல அட்சர சுத்தமாக ஒலியெழுப்புவதில் அந்த வயதிலேயே தான்சேன் சிறந்து விளங்கினார். அவர் இசைத்துறையில் மாபரும் சாதனைகள் செய்ய அந்த பயிற்சி நிச்சயமாக உதவியாக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு இசைமேதை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த இந்த நிகழ்ச்சி ஒரு ’ஃபாண்டஸி’ திரைப்படத்தைவிடவும் அல்லது ’மேஜிகல்ரியலிஸ’ இலக்கியத்தைவிடவும் சுவாரஸ்யமாக உள்ளது! ஆச்சரியம், ஆனால் உண்மை!

 

Mia_Tansen_by_Lala_Deo_Lalஇசைக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள நெருக்கமான உறவுக்கு மிகச்சிறந்த உதாரணம் ஹஸ்ரத் மியான் தான்சேன். அவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்; அவர் பெயர் ராம்தனு பாண்டே; பின்னாளில் அவர் இஸ்லாத்தை ஏற்றார்; பேரரசர் அக்பரின் அவையில் ஆஸ்தானப் பாடகராக, நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார்; அக்பருடைய மகள் மெஹ்ருன்னிஸாவைத் திருமணம் செய்துகொண்டார் என்பதையெல்லாம்விட முக்கியமான விஷயம் இரண்டு வேறுபட்ட துறைகளில் மேதைகளாக இருந்த இருவரால் உருவாக்கப்பட்டு, இரண்டும் ஒன்றாய்க்கலந்த ஆன்மிக இசைமேதையாக தான்சேன் இருந்தார் என்பதுதான்.

 

ஆமாம். அவரது இசைக்கு குருவாக ஸ்வாமி ஹரிதாஸ் இருந்ததுபோல, ஷெய்கு மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களின் ஷத்தாரிய்யா ஆன்மிகப் பாதையில் சிஷ்யராக தான்சேன் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதுமட்டுமல்ல. தன் குருநாதரின் அடக்கஸ்தலம் இருக்கும் இடத்திலேயே தான்சேனுடைய அடக்கஸ்தலமும் இருக்கிறது. குருவுக்கு மிக நெருங்கிய சிஷ்யர்களுக்கு மட்டுமே அத்தகைய பாக்கியமும் அனுமதியும் கிடைக்கும். குருவையும் சீடரையும் பற்றி அதிகபட்ச தகவல்கள் நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைத்திருக்கும் தகவல்களே நமக்கு வேண்டியதைச் சொல்கின்றன.

 

இசையின்மீது இறைவனுக்கு எந்தக் காலத்திலும் பிணக்கு இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் படைத்தவன் இறைவனே எனும்போது, சப்தங்களையும், சப்தங்களின் ஒழுங்கமைப்பான இசையையும் படைத்தவன் அவனேயாவான். இசைமேதைகளுக்கெல்லாம் இசைமாமேதை இறைவன் ஒருவனே. இதை இஸ்லாமிய சூஃபித்துவம் புரிந்துகொண்டது. இறைவனிடமிருந்து மனிதனை தூரப்படுத்துவதற்கு பதிலாக, ஒரு மனிதன் இறைவனோடு நெருங்குவதற்கு இசை உதவிகரமாக இருக்கிறது என்பதும் சூஃபிகளுக்குத் தெரிந்துவிட்டது.  தன்னை இழந்து, இறையோடு ஒன்றுவதற்கு உதவும் கருவியாக ’ஸமா’ என்ற சூஃபி இசை பயன்படுத்தப்பட்டதும் வரலாறு.

 

மனித உடலின் அசைவுகள் யாவும் இசையாகவே பரிணமிக்கிறது. அது மூச்சானாலும் சரி, இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, ரத்த ஓட்டம் எதுவானாலும் சரி. எதுவுமே இஷ்டத்துக்கு நடப்பதில்லை. ஒரு லயத்திலும், சுதியிலும், ஒரு தாளகதியிலும்தான் எல்லாமே நடந்துகொண்டுள்ளன. இசை மனிதனுக்குள்ளேயே உள்ளது. அதனால்தான் அவனால் வெளியிலிருந்து வரும் இசையையும் கேட்டு ரசிக்க முடிகிறது. மனித உடலும் இந்த பிரபஞ்சமும் இசையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தாளம் சரியாக இருந்தால் பருவம் சரியாக இருக்கிறது. தாளம் தவறினால், நோய், பூகம்பம், சுனாமி இப்படி எவ்வளவோ, என்னென்னவோ. இசைதான் தொடக்கம். திருக்குர்’ஆனில் வரும் ’குன்ஃபயகூன்’ என்னும் சொல்லும், ஓம் எனும் நாதமும் சொல்வது அதுதான். புனித பைபிள்கூட God said என்றே தொடங்குகிறது. The word was God என்று மறுபடியும் பைபிள் உறுதி செய்கிறது. எனவே உண்மையைப் புரிந்துகொண்ட யாரும் இசைக்கு எதிராக இருக்க முடியாது.

 

TansenTomb02’அவ்லியா’ எனப்படும் இறைநேசர்கள் அனைவருமே இஸ்லாமிய சட்டதிட்டங்களைக்  கரைத்துக் குடித்தவர்கள் மட்டுமல்ல, சொல்லப்பட்ட சொற்களுக்குப் பின்னால் இருக்கும் சொல்லப்படாத உண்மைகளைப் புரிந்துகொண்டவர்கள். அவர்களுடைய கண்கள் சாதாரண கண்கள் அல்ல. எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்கள். நமக்கு ஒரு துளி ரத்தம் தெரிந்தால் அவர்களுக்கு அதில் உள்ள RBC, WBC எல்லாம் தெரியும். ஆனால் அவர்கள் பார்ப்பதை நம்மால் பார்க்க முடியாது. மலையின் உச்சியில் நிற்பவர்களுக்கு மலைக்குக் கீழே உள்ள எல்லாம் தெரியும். இரண்டு பக்கமும் தெரியும். மலையடிவாரத்தில் அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கோ அவர்களுக்குத் தெரிவதெல்லாம் தெரிய நியாயமில்லை. சூஃபிகளை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.

 

நாகூர் நாயகம் மகான் காதிர் வலி ஷாஹுல் ஹமீது பாதுஷா அவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர்களுடைய குருநாதர் ஷெய்கு முஹம்மது கௌது குவாலியரி அவர்கள் என்னும் விஷயம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மியான் ஹஸ்ரத் தான்சேனுடைய குருவும் கௌது குவாலியரி அவர்கள்தான்!

 

ஆம். தான்சேன் ஒரு இசை மேதை மட்டுமல்ல. ஒரு ஞானியும்கூட. அவருடைய ஞானம் இசை சம்பந்தப்பட்டதல்ல. ஆனால் அவருடைய இசை ஞானம் சம்பந்தப்பட்டது. அதனால் அவரால் தீபக் ராகத்தைப் பாடி தீயை மூட்டவும், அதற்கு எதிரான மேக் மல்ஹார் ராகத்தால் மழையை வரவழைக்கவும் முடிந்தது! அவர் பாடியபோதெல்லாம் மெழுகுவர்த்திகள் தாமாகவே பற்றிக்கொண்டு ஒளிவிட ஆரம்பித்தன என்றும் கூறப்படுகிறது!

 

இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சப்த ஒழுங்குகள் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. இசையால் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். இசை கேளுங்கள், மூளையில் ‘நியூரோபெப்டைடுகள்’ சுரந்து உங்கள் நோய்கள் நீங்குகின்றன என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.

 

நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் வாப்பா அவர்களின் சங்கீத குரு தாவூத் மியான் கான் அவர்கள் கடைசிக்காலத்தில் கால் நோயால் அவதிப்பட்டபோது, நாகூர் நாயகம் அவருடைய கனவில் தோன்றி, மால்கோஸ் என்ற ராகத்தை தர்காவில் வைத்துப் பாடுமாறு உத்தரவு கொடுத்தார்கள். அதன்படி தாவூத் மியான் கான் பாட, அவருடைய கால் நோயும் குணமானது என்பது நாகூர் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

 

இந்த நிகழ்ச்சி எனக்கு சொல்லப்பட்டபோது தான்சேன் பற்றியோ அவரும் நாகூர் நாயகமும் ஒரே குருவிடம் பயின்றவர்கள் என்ற உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது எல்லாம் புரிகிறது. பாதுஷா நாயகமவர்களுடன் சேர்ந்து தான்சேன் பயின்றுள்ளார்!

 

தான்சேன் இறந்தபோது துக்கத்தில் அவர் மகன் பிலாஸ்கான் ’பிலாஸ்கான் தோடி’ ஒரு புதிய ராகத்தையே உருவாக்கிப்பாடுகிறார். அவர் அதைப் பாடியபோது தான்சேனின் இறந்த உடலிலிலிருந்து வலதுகை மட்டும் ‘ஆஹா’ என்பதுபோல அசைந்து அந்த ராகத்தைக் கௌரவித்தது என்றும் கூறப்படுகிறது. தான்சேன் ஒரு ஆன்மிகவாதி, மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களின் சீடர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது இந்த நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்கும் என்ற உண்மை புரியும். அக்பர் உண்மையில் கொடுத்துவைத்தவர்தான். இந்த வரலாற்றுத் தகவல்களையெல்லாம் படிக்கும்போது, அந்தக் காலத்தில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் எனக்கு ஏற்படுகிறது!

 

தான்சேனுக்கு ’மியான்’ என்ற கௌரவப் பட்டத்தைக் கொடுத்தது பேரரசர் அக்பர். ’மியான்’ என்றால் ‘பேரறிஞர்’ என்று பொருள். முதல் முறையாக அவர் அக்பருடைய அவையில் பாடியபோது அக்பர் அவருக்கு ஒருலட்சம் தங்கக் காசுகளைப் பரிசளித்தார்! ஹிந்துஸ்தானி இசைப்பாரம்பரியத்தில் பாடப்படும் எல்லா வகையான பாடல்களுமே, எல்லா ’கரானா’க்களுமே ஒருவிதத்தில் தான்சேனிடமிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

ஹிந்துஸ்தானி இசையில் உள்ள பல ராகங்கள் தான்சேன் என்ற பெயருடன் சேர்த்தே சொல்லப்படுகின்றன. மியான் கி தோடி, மியான் கி மல்ஹார், மியான் கி மந்த், மியான் கி சரங் என. தர்பாரி கானடா, தர்பாரி தோடி, ராகேஸ்வரி ஆகிய ராகங்களையும் உருவாக்கியவர் தான்சேன் என்பது குறிப்பிடத்தக்கது. தான்சேன் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ’தான்சேன் சங்கீத் சம்மேளன்’ என்னும் இசை விஷா குவாலியரில் நடத்தப்படுகிறது.

 

ஒருநாள் அக்பர் தான்சேனிடம் கேட்டார், “நீங்கள் இவ்வளவு அற்புதமாகப் பாடுகிறீர்களே. உங்களுடைய குருநாதர் எப்படிப் பாடுவார்?”

 

“அவரோடு என்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்”

 

“உங்கள் குருநாதர் இருக்கிறாரா?”

 

“ஆம் இருக்கிறார் ஆனால் உடல் மரித்துவிட்டது”

 

“நான் அவர் பாடுவதைக் கேட்க வேண்டுமே”

“அது முடியாது. அவர் அரசர்கள்  முன்னிலையிலெல்லாம் பாடுவதில்லை”

 

“நான் ஒரு சேவகனைப் போல வருகிறேனே”

 

“அப்படியானால் அவர் பாடும் சாத்தியமுள்ளது”

 

இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு வேலைக்காரனைப் போன்ற உடையில் பேரரசர் அக்பரும் தான்சேனும் சென்றனர். ஒரு மலைப்பொதும்பில் தனிமையில் இருந்தார் ஸ்வாமி ஹரிதாஸ். இருவரும் சென்று அவரைப் பாடும்படிக் கேட்டுக்கொண்டனர். வேலைக்காரன் ரூபத்தில் வந்திருப்பது ஒரு பேரரசர் என்பது ஹரிதாஸுக்குத் தெரிந்தது. இருந்தாலும் பேரரசரின் பணிவு அவருக்குப் பிடித்திருந்தது. அவரும் பாடினார்.

 

அவர் பாடப்பாட இந்த பூமியும், அந்த இருவரும் பரவசமடைந்து பிரக்ஞை இழந்தனர். அவர்கள் பாடல் முடிந்து மீண்டபோது அங்கே ஹரிதாஸ் இல்லை.

 

“நாம் மறுபடி வந்து தொல்லை கொடுப்போம் என்றோ என்னவோ அவர் போய்விட்டார். இனி நிரந்தரமாக வரமாட்டார்”, என்றார் தான்சேன்.

 

ஆனாலும் ரொம்ப காலம் அக்பருக்கு ஹரிதாஸின் குரலையும் இசையையும் மறக்கவே முடியவில்லை. இனி அவர் மறுபடியும் வரவே மாட்டாரா, இனி அவர் குரலைக் கேட்கவே முடியாதா என்று அக்பர் கேட்டார். முடியாது என்று பதில் சொன்னார் தான்சேன். உங்களுக்குத்தான் அவர் பாடிய ராகம் என்னவென்று தெரியுமல்லவா, நீங்களாவது அதைப் பாடுங்களேன் என்று அக்பர் கேட்டுக்கொண்டார்.

 

பாதுஷா கேட்டுக்கொண்டதற்காக தான்சேன் பாடினார். ஆனாலும் அக்பருக்குத் திருப்தி ஏற்படவில்லை. “நன்றாக இருக்கிறது. ஆனாலும் அவர் பாடியது மாதிரி இல்லையே ஏன்?” என்று கேட்டார் அக்பர்.

 

மிகுந்த வருத்தத்தோடும் கொஞ்சம் கோபத்தோடும் ஒரு பதிலைச் சொன்னார் தான்சேன். இசை என்பது ஆன்மிகத்தின் கூறு என்பதை நிரூபிக்கும் பதில் அது.

“நான் ஒரு அரசருக்காக, அரசருக்குமுன் பாடினேன். ஆனால் என் குருநாதரோ இறைவனுக்காக, இறைவனின் முன்னிலையில் பாடினார்”

 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தான்சேன் உலக வாழ்வை வெறுத்து ஆன்மிக நாட்டம் கொண்டு மகான் முஹம்மது கௌது குவாலியரி அவர்களிடம் சென்று சீடராகி ஆன்மிகப் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டார் என்று கூறுகிறார் சூஃபி ஞானியும் சரோத் மற்றும் வீணை வித்வானும் ஹிந்துஸ்தானி பாடகருமான சூஃபி ஞானி ஹஸ்ரத் இனாயத் கான்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book