1

With Puppies-4கொஞ்சம் ’எடிட்’ செய்து இப்போது ஃபைனல் ட்ராஃப்ட் உங்கள் முன்னே!

முகநூலில் மூன்று போமரேனியன் அழகு நாய்க்குட்டிகளைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஒளிப்படத்தை இட்டேன். அதற்கு என்ன விதமான எதிர்வினைகள் வரும் என்று தெரிந்துதான் இட்டேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை என்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே.

ஒரே ஒரு சகோதரர் மட்டும் நான் ஒரு இஸ்லாமியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதாக எழுதியிருந்தார். ஒரு முஸ்லிம் நாய்களைத் தொடலாமா என்று இன்னொரு சகோதரர் கேட்டிருந்தார்.

இந்த விஷயம் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டியே இதை எழுதுகிறேன்.

முஸ்லிம்கள் அனைவரும் திருக்குரானையும் திருநபி வாக்கினையும் ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்தக் குழுவினராக இருந்தாலும் சரி. ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகி, அது நம் வாழ்வை முற்றிலுமாக ஆட்கொண்டு, நாம் என்ன தவறு செய்கிறோம் என்றே அறியாமல் செய்துவிட்டதுதான் ஆகப்பெரிய சோகம் என்று கருதுகிறேன்.

அது என்ன தவறு? குர்’ஆன், ஹதீஸ் என்ற இரண்டில் முதலில் முக்கியத்துவம் தரவேண்டியது குர்’ஆனுக்குத்தான். ஆனால்  ஹதீஸுக்குப் பிறகான இரண்டாம் இடத்துக்குக் குர்’ஆன்  தள்ளப்பட்டுவிட்டதுதான் இன்றைக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். அதிர்ச்சிதரும் உண்மை இது.

குர்’ஆனில் எதுவும் மாற்றப்படவில்லை. இறுதித்தூதர் (ஸல்) அவர்களுக்கு எந்த குர்’ஆன் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளாக அருளப்பட்டதோ அதே குர்’ஆன்தான் இன்று உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களால் ஓதப்பட்டுக்கொண்டும், விளக்கப்பட்டுக்கொண்டும், பின்பற்றப்பட்டுக்கொண்டும் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. ஒரு நுக்தா (புள்ளி)கூட மாற்றப்படாமல் தூய்மையாகப் பாதுகாக்கப்படும்  ஒரே நூல் குர்’ஆன்தான். இதை முஸ்லிம்கள் சந்தேகிக்கமாட்டார்கள். சந்தேகித்தால் தெளிவு பெற வழியுண்டு. ஆனால் ஹதீஸ் விஷயம் இப்படிப்பட்டதல்ல.

குர்’ஆனை இறுதித்தூதர் (ஸல்) மனனம் செய்யவும் எழுதி வைக்கவும் சொன்னார்கள். எனவே இரண்டு விதங்களில் அது பாதுக்காக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உபதேசங்கள் குர்’ஆனுக்கு இணையான இன்னொரு நூலாகிவிடலாம், அதனால் இறைவேதத்துக்கு உரிய மரியாதைக்கு பங்கம் ஏற்படலாம் என்பதால் அவைகளை எழுதி வைக்க வேண்டாம் என்று கூறினார்கள். (இதைக்கூட ஹதீதுகள் மூலமாகவே நாம் தெரிந்துகொள்கிறோம்).

குர்’ஆனைத்தவிர்த்து நான் சொல்லும் எதையும் எழுதி வைக்கவேண்டாம். அப்படிச் செய்திருந்தால் அதை அழித்துவிடுங்கள் என்று இறுதித்தூதர் (ஸல்) சொன்னார்கள். அபூ சயீத் குத்ரி அறிவிக்கும் இந்த நபிமொழி முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது (நூல் 42, எண் 7147)

அவர்களுக்குப் பிறகான கலீஃபாக்களாக அபூபக்கரும் உமரும்கூட இவ்விதமே செய்தார்கள். அப்படி எழுதி வைக்கப்பட்டிருந்த ஹதீஸ்களை எரித்துவிடும்படி உத்தரவிட்டார்கள். அப்படியே செய்யவும் பட்டது.  தாம் சேர்த்து வைத்திருந்த 500 நபிமொழிகளையும் எரித்துவிட்ட பிறகே அபூபக்கருக்கு நிம்மதியான உறக்கம் வந்தது. தன் மகன் அப்துல்லாஹ்வால் தொகுத்து வைக்கப்பட்ட சில நபிமொழிகளை அழித்துவிடும்படி உமர் இப்னு கத்தாப் உத்தரவிட்டார்கள்.

ஹதீதுக்கலை வல்லுனர்களால் இன்று ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை, நம்பத்தகுந்தவை) என்று வரையறுக்கப்பட்ட ஆறு தொகுப்புகளும் இறுதித்தூதர் (ஸல்) இந்த உலகை விட்டுப் பிரிந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டவையே. இரண்டாம் உமர் என்று வரலாற்றில் அறியப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸின் காலத்தில்தான் (கிபி 682 – 720) நபிமொழிகள் தொகுக்கப்பட்டன.

எனவே அவற்றில் ஏகப்பட்ட பொய்களும், தவறான கருத்துக்களும் திணிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது. அதனால்தான் லட்சக்கணக்கான ஹதீதுகளிலிருந்து உண்மையானவை என்று கருதப்பட்ட நபிமொழிகளை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று இறைவனும் குர்’ஆனில் எச்சரிக்கின்றான்:

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகர மான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (6”112)

இட்டுக்கட்டும் வேலை நடக்கும் என்று இறைவன் முன்கூட்டியே சொல்லிவிட்டான். அது தெரிந்ததனால்தான் இறுதித்தூதர் (ஸல்) அவர்களும் என் போதனைகளை எழுதிவைக்காதீர்கள் என்று சொன்னார்கள் போலும். ஹதீதுகள் விஷயத்தில் எவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிந்துகொள்ள கீழே வரும் தகவல்களைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்.

  • கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஹதீதுகள் எழுதப்பட்டிருந்தன.
  • ஹம்பலி இமாம் அவர்கள் தம் ”முஸ்னது” நபிமொழித்தொகுப்பில் தனக்குக் கிடைத்திருந்த 700,000 ஹதீஸ்களிலிலிருந்து 40,000 ஹதீஸ்களை மட்டுமே தொகுத்துக் கொடுத்தார்கள். அதாவது 6,60,000 ஹதீஸ்களை விட்டுவிட்டார்கள். அதாவது, தனக்குக்கிடைத்த 100-ல் 94 விழுக்காடு பொய்யானது, புரட்டானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற சந்தேகத்தில் விடப்பட்டன.
  • இமாம் புகாரி அவர்கள் தமக்குக் கிடைத்த 6,00,000 (ஆறு லட்சம்) ஹதீஸ்களில் இருந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே நம்பத்தகுந்தவை என்று வடிகட்டி எடுத்துக்கொடுத்தார்கள். அப்படியானால் 592,725 ஹதீஸ்களை விட்டுவிட்டார்கள். 99 சதவீதம் நம்பத்தகுந்ததாக இல்லை!
  • இமாம் முஸ்லிம் தனக்குக் கிடைத்த மூன்று லட்சம் ஹதீஸ்களில் இருந்து 4000 மட்டுமே கொடுத்தார்கள். இதிலும் இட்டுக்கட்டப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விடப்பட்டவை 99 சதவீதம்!

ஆனால் குர்’ஆனில் விஷயம் இப்படிப்பட்டதல்ல. மிகச்சிறந்த, அழகிய ஹதீஸ் (அஹ்ஸனு ஹதீஸ்) என்று இறைவன் குர்’ஆனையே குறிப்பிடுகின்றான் (39:23). அதுமட்டுமல்ல,

ஹதீதுகளின்மீது நாம் அபாரமாக நம்பிக்கை வைத்துவிட்டு அதனையொட்டி இதுதான் சரி, இதுதான் தவறு என்று விவாதித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அப்படியானால் நபிமொழிகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட வேண்டுமா?

நான் அப்படிச் சொல்லமாட்டேன். ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்புளில் இருந்து ஹதீஸ்களைப் படித்தாலும் திருமறைக்குப் பக்கபலமாக இருக்கிறதா, அல்லது திருமறைக்கு முரணாகச் சொல்கிறதா, இப்படி இறுத்தித்தூதர் சொல்லியிருக்க வாய்ப்புண்டா, அவர்களது கருணை மிகு உள்ளமைக்கு ஹதீஸ் பொருந்துகிறதா என்றெல்லாம் யோசியுங்கள். உங்களுக்கு அல்லாஹ்வின் பக்கமிருந்து உண்மை வழிகாட்டுதல் கிடைக்கலாம்.

உதாரணமாக நாய்கள் பற்றிய விஷயத்தைப் பார்க்கலாம்.

நாய்கள் அசுத்தமானவை

அவற்றை முஸ்லிம்கள் வளர்க்கக் கூடாது

தொடக்கூடாது

அவற்றின் உமிழ் நீர் நோயை உண்டாக்கக்கூடியது

என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. அந்த அடிப்படையில்தான் மின்ஹாஜ் முஹம்மத் என்ற சகோதரர் என்மீது வருத்தம் தெரிவித்திருந்தார். சையத் முஹம்மத் என்ற சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். எனவே நாய்கள் தொடர்பாக முதலில் அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்த்துவிடலாம்:

குர்’ஆனிலே ’அஸ்ஹாபுல் கஹ்ஃப்’ என்று ஒரு அத்தியாயம் உள்ளது. குகைத்தோழர்கள் என்ற அந்த 18வது அத்தியாயத்தில் குகைத்தோழர்கள் எப்படி இறைவன் விருப்பப்படி பலகாலம் உறங்கினார்கள், பின்பு விழித்தார்கள் என்ற கதை சொல்லப்படுகிறது. அதில் 13வது வசனம் இப்படிச் சொல்கிறது:

அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம். (18:13)

அந்த இளைஞர்களை ஈமான் கொண்டவர்கள் (இன்னஹும் ஃபித்யத்துன் ஆமனூ பிரப்பிஹிம்) என்று இறைவன் வர்ணிக்கிறான். அதோடு அவர்களுக்கான ஹிதாயத் (நேர்வழிகாட்டுதலை) அதிகமாக்கினோம் என்றும் கூறுகிறான்.

அதனால் என்ன என்கிறீர்களா? அவர்கள் ஒரு நாயை வளர்த்தார்கள். பாசத்துக்காகவோ, பாதுகாப்புக்காகவோ. அந்த நாயும் அவர்களோடுதான் சென்றது. அவர்களோடுதான் அதுவும் அந்தக் குகையில் உறங்கியது. இந்த விஷயத்தை அல்லாஹ் 18வது வசனத்தில் உறுதிப்படுத்துகிறான்:

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது (18:18)

நாய் வளர்த்த அவர்கள் ஈமான் கொண்டவர்கள், அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் பெற்றவர்கள்

என்று குர்’ஆன் கூறுகிறது. எனவே ஈமான் கொண்டவர்கள் நாய் வளர்க்கலாம், அது இறைவனின் ஹிதாயத்தையும் உதவியையும் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது.

நாய்கள் அசுத்தமானவையாகவும், தடுக்கப்பட்டவையாகவும் இருந்தால், இறைவன் இப்படிக் கூறியிருப்பானா? அல்லது, அவை அசுத்தமானவையாக இருப்பின், அந்த அசுத்தம் நம்மை பாதிக்காத வகையில் நடந்துகொண்டால் போதும் என்ற அர்த்தம் தொனிப்பதாகவும் இதைக் கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான ஆயத்தையும் பார்க்கவேண்டும். நம்முடைய உணவில் ஹலால் எது என்று வரையறை செய்துகொடுக்கும் வசனம் அது. அதில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:

(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.(05:04)

’சூரா மாயிதா’வில் வரும் வசனங்கள் இவை. அந்தக் காலத்தில் வேட்டையாடுவதற்காக  சில பிராணிகளை அரேபியர் வளர்ந்து வந்தனர். அவற்றில் நாய் முக்கியமானது. (வேட்டை நாய்களை வைத்துக்கொள்ளலாம் என்று கூறும் ஹதீஸ்களும் உண்டு). அப்படிப்பட்ட  நாய் ஒன்று ஒரு பறவையை வேட்டையாடி தன் வாயில் பிடித்துக் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தால் அந்த உணவு நமக்கு ஹலால் என்று அர்த்தம்.

நாம் இப்போது வாழும் வாழ்க்கை முறை வேறு; அந்தக்கால அரேபியர் வாழ்ந்த வாழ்க்கை முறைவேறு. உணவு வேட்டைக்காக நாயை அனுப்பிய காலம் அது. நாய் அசுத்தமானது, அதன் உமிழ் நீர் தொற்று நோயைப் பரப்பக்கூடியதென்றால், இப்படி இறைவன் கூறியிருப்பானா? நாயைப் பற்றி அதைப்படைத்த இறைவனுக்கு அதிகமாகத் தெரியுமா அல்லது இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கா?

நாய் நஜீசானது, அது உணவுப்பாத்திரத்தில் நக்கிவிட்டால் அதை ஏழு முறை கழுவ வேண்டும், கறுப்பு நாய்களையெல்லாம் கொல்லவேண்டும் என்று கூறுகின்ற ஹதீஸ்களெல்லாம் அல்லாஹ் கூறுவதற்கு முரணாகவும், இறுதித்தூதரின் ஆளுமைக்குக் களங்கம் கற்பிப்பதாகவும் உள்ளன என்பதுதான் நிஜம். அப்படியானால் எதை நம்பவேண்டும்? சிந்தியுங்கள்.

ஹதீதுத் தொகுப்புகளை குறை கூறுவது என் நோக்கமல்ல. மிகுந்த சிரமத்துடன் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து அவர்கள் தொகுத்துள்ளார்கள்.  அவர்கள் கவனத்தையும் கடும் உழைப்பையும் மீறி உள்ளே புகுந்துவிட்ட சில அல்லது பல தவறுகளினால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்துதானே ஆகவேண்டும்?

நாயைத் தொடலாம். கொஞ்சலாம். வளர்க்கலாம். அது அவரவர் இஷ்டம் அல்லது தேவைக்கு ஏற்றபடி. அல்லாஹ் அதைத் தடை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் சரி. ஆனால் நாய் வளர்த்துதான் ஆகவேண்டும் என்றும் கட்டாயமில்லை.

சகோதரர்களே, குர்’ஆன ஹதீஸ் இரண்டும் நமக்கு இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டு கண்களாலும் பார்க்கும்போதுதான் முழுமையான உலகம் தெரியும். ஒரு கண்ணால் பார்த்தால் குறையுடனேதான் தெரியும். கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இனியாவது ஹதீஸ்களுக்கு மரியாதை கொடுக்கும் அதே நேரத்தில் குர்’ஆனுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். இரண்டு கண்களாலும்தான் பார்க்கவேண்டும். ஒரு கண்ணால் மட்டும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த ஒரு மார்க்க அறிஞர் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு கருத்தை சிந்தித்துப் பார்க்காமல் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவேண்டியதில்லை.விஷயமே தெரியாமல், கொஞ்சம்கூட சுயமாகச் சிந்திக்காமல் வார்த்தையை விடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இறைவன் நம் அனைவருக்கும் ஹிதாயத் வழங்குவானாக!

அன்புடன்

நாகூர் ரூமி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புனைக்கும் அடிசறுக்கும் Copyright © 2015 by நாகூர் ரூமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book